ஊரடங்கை மீறிய அதிகளவானோர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது - இதுவரை 265 பேர் கைது, 48 வாகனங்கள் கைப்பற்றல் - News View

Breaking

Post Top Ad

Saturday, October 17, 2020

ஊரடங்கை மீறிய அதிகளவானோர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது - இதுவரை 265 பேர் கைது, 48 வாகனங்கள் கைப்பற்றல்

கம்பஹா மாவட்த்திலுள்ள 19 பொலிஸ் பிரிவுகளிலும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்ட 53 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 8 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது குறித்த பகுதியில் இதுவரை ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட அதிகூடிய கைது எண்ணிக்கையாகும் என அவர் சுட்டிக் காட்டினார்.

அதற்கமைய, கடந்த ஒக்டோபர் 04ஆம் திகதி முதல் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 265 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், ஊரடங்குச் சட்டத்தை மீறி பயணித்த முச்சக்கரவண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட 48 வாகனங்கள் இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே, பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே இருந்து தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை பேணுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன், மருந்தகங்கள் உள்ளிட்ட எவ்வித வர்த்தக நிலையங்களும் இன்றும் திறக்கப்படாது என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களின் ஊடாக தொடர்ந்தும் பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த பிரதேசங்களின் ஊடாக பயணிக்கும் பொதுப் போக்குவரத்து சேவை உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களை தவிர பயணிகளை ஏற்றவோ, இறக்கவோ அனுமதிக்கப்படமாட்டார்கள் என அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதேவேளை, பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படாத பிரதேசங்களில் கூட, கொவிட்-19 தொற்று நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதால், சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அதி விசேட வர்த்தமானி அறிவிப்பிற்கு அமைய, முகக்கவசம் அணிதல், கைககளை கழுவுதல், சமூக இடைவெளியைப் பேணுதல் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டல் விடயங்களை பொதுமக்கள் எப்போதும் கடைப்பிடிப்பதன் மூலம், இத்தொற்றுநிலையை தடுப்பதற்கு ஒத்துழைப்பு வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களும், உரிய சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad