பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதுஷ் சுட்டுக் கொலை - 22 கிலோ ஹெரோயின், 2 கைத்துப்பாக்கிகள், மோட்டார் சைக்கிள் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Monday, October 19, 2020

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதுஷ் சுட்டுக் கொலை - 22 கிலோ ஹெரோயின், 2 கைத்துப்பாக்கிகள், மோட்டார் சைக்கிள் மீட்பு

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதுஷ் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கும் பாதாள குழுவினருக்கும் இடையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தின் போதே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 

2006ஆம் ஆண்டு இடம்பெற்ற தென் மாகாண சபை டெனி இத்தெடியவின் கொலை உள்ளிட்ட பல்வேறு கொலைகள், திட்டமிட்ட பல குற்றச் செயல்கள் தொடர்பிலான சந்தேகநபரான மாகந்துரே மதூஷ் என அழைக்கப்படும் சமரசிங்க ஆரச்சிகே மதூஷ் லக்சித இன்று (20) அதிகாலை, மாளிகாவத்தை, அப்பல் வத்தை, லக்சித தொடர்மாடி சம்பவத்தில் மரணமடைந்துள்ளதாக, கொழும்பு குற்றப் பிரிவு அறிவித்துள்ளது.

மாகந்துரே மதூஷ் கடந்த 2019ஆம் ஆண்டு பெப்ரவரி 05ஆம் திகதி துபாயில் இடம்பெற்ற விருந்துபசாரமொன்றில் வைத்து, துபாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். அவருடன் கஞ்சிப்பானை இம்ரான் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து, இலங்கையினால் தொடர்ந்தும் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, நாடு கடத்தப்பட்ட மாகந்துரே மதூஷ், கடந்த 2019ஆம் ஆண்டு மே 05ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து CID யினால் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்ட மாகந்துரே மதூஷ், மேலதிக விசாரணைகளுக்காக கடந்த வெள்ளிக்கிழமை (16) கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார்

அதற்கமைய, மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட மேலும் சில சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், கொடிகாவத்தை பிரதேசத்தில் வைத்து ஹெரோயின் 10 கிலோ கிராம் மீட்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து இன்றையதினம் (20) போதைப் பொருளை காண்பிப்பதற்காக மதூஷ் உடன் மேலும் சில சந்தேகநபர்களை அழைத்துச் சென்ற நிலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் மதூஷ் மரணமடைந்துள்ளதோடு, கொழும்பு குற்றப் பிரிவு பொலிஸ் அதிகாரிகள் இருவர் காயமடைந்துள்ளதாக, கொழும்பு குற்றப் பிரிவு (CCD) தெரிவித்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதன்போது, 220 மில்லியன் ரூபா பெறுமதியான 22 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள், 2 கைத்துப்பாக்கிகள் மற்றும் பாதள உலக குழு உறுப்பினர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியன மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மாகந்துரே மதூஷ் துபாயிலிருந்தவாறு, இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு திட்டமிட்ட குற்றச் செயல்கள், ஹெரோயின் கடத்தல் போன்ற விடயங்களை மேற்கொண்டமை தொடர்பிலான தகவல்கள் கிடைக்கப் பெற்றதற்கு அமையவே, அவரை துபாயிலிருந்து நாடு கடத்தி இலங்கைக்கு கொண்டு வந்ததாக, அஜித் ரோஹண தெரிவித்தார்.

இன்றையதினம் (20) மாகந்துரே மதூஷின் மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதாகவும், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றப் பிரிவினர் மேற்கொண்டுள்ளதாகவும், அஜித் ரோஹண தெரிவித்தார்.

No comments:

Post a Comment