மக்களை திசை திருப்புவதற்காகவே ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான கைது வேட்டை என்கிறார் வேலுகுமார் - News View

About Us

About Us

Breaking

Monday, October 19, 2020

மக்களை திசை திருப்புவதற்காகவே ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான கைது வேட்டை என்கிறார் வேலுகுமார்

மக்களை திசை திருப்புவதற்காகவே ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான கைது வேட்டையை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வேலுகுமார் நேற்றைய தினம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அரசியல் பழிவாங்களை அடிப்படையாகக் கொண்ட அரச கட்டமைப்பின் இந்த அணுகுமுறைகளை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

நாட்டை மீட்டெடுக்கப் போவதாகவும், புது யுகத்தை நோக்கி பயணிப்பதற்கான அபிவிருத்தி புரட்சியை ஏற்படுத்தப் போவதாகவும் கூறி ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம், பல மாதங்கள் கடந்தும் பெரிதாக ஒன்றையும் செய்யவில்லை.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே தமது தோல்விகளை மூடிமறைத்து, பெரும்பான்மையின மக்கள் மத்தியில் தமது செல்வாக்கை தக்க வைத்துக் கொள்வதற்காக அரசாங்கம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான் ரிஷாட் பதியுதீனை குறிவைத்துள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பல தடவைகள் முன்னிலையாகி ரிஷாட் பதியுதீன் சாட்சியமளித்துள்ளார். அவர் எங்கும் ஓடி ஒளியவில்லை. சட்ட ரீதியாக முன்னெடுக்கப்படும் முழு நடவடிக்கைகளுக்கும் அவர் ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்.

இந்நிலையில் தேர்தல் காலத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரை கைது செய்து, 21/4 தாக்குதலுக்காகவே இந்த கைது என்பதை மக்கள் மத்தியில் காண்பிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.

ரிஷாட்டை கைது செய்வதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையானது அரசியல் பழிவாங்கலாகும். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

No comments:

Post a Comment