20 ஆவது திருத்தம் தான்தோன்றித்தனமான நிறைவேற்றதிகாரத்தை வழங்கும் : பௌத்த மதத் தலைவர்கள் மூவர் ஜனாதிபதிக்கு கடிதம் - News View

Breaking

Post Top Ad

Friday, October 16, 2020

20 ஆவது திருத்தம் தான்தோன்றித்தனமான நிறைவேற்றதிகாரத்தை வழங்கும் : பௌத்த மதத் தலைவர்கள் மூவர் ஜனாதிபதிக்கு கடிதம்

20வது திருத்தம் குறித்து கடும் கரிசனையை வெளியிட்டு மூன்று சிரேஸ்ட பௌத்த மதத் தலைவர்கள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுக்கு கடிதமொன்றை எழுதியுள்ளனர்.

20வது திருத்தம் தன்னிச்சையாக செயற்படும் ஜனாதிபதியை உருவாக்கும், அமைச்சரவையை பலவீனப்படுத்தும் என ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் பெங்கமுவே நாலக்க தேரர், முருதெட்டுவே ஆனந்த தேரர் மற்றும் எல்லே ஞானவன்ச தேரர் ஆகிய மூவரும் தெரிவித்துள்ளனர்.

மக்களின் மனதை வென்ற பிரதமர் மகிந்த ராஜபக்சவின் அதிகாரத்தையும் ஸ்திரநிலையையும் 20வது திருத்தம் பலவீனப்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ள பௌத்த மதத் தலைவர்கள் ஜனாதிபதி தான் நினைத்த நேரத்தில் தனது விருப்பத்திற்கு ஏற்ப அமைச்சர்களையும் அமைச்சர்களுக்கான பொறுப்புகளையும் மாற்றுவதற்கு இது வழிவகுக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

20 ஆவது திருத்தம் தான்தோன்றித்தனமான நிறைவேற்றதிகாரத்தை வழங்கும் என்பதுடன், அரசியலமைப்பு பேரவை மற்றும் நீதித்துறையை அது கட்டுப்படுத்தும் நிலையை உருவாக்கும் எனவும் தேரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன் காரணமாக பலவீனமான அமைச்சரவை ஸ்தாபிக்கப்படும் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

19வது திருத்தம் மூலம் 30 அமைச்சர்கள் மாத்திரமே அமைச்சரவையில் காணப்படலாம் என விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை 20 வது திருத்தம் மூலம் நீக்குவதற்கு உள்நோக்கம் எதுவுமிருக்கலாம் என பௌத்த மதத் தலைவர்கள் ஜனாதிபதிக்கான கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதியாக பதவி வகிக்கும் ஒருவர் அரசமைப்பிற்கு முரணான நடவடிக்கையில் ஈடுபட்டால் அதற்கு எதிராக நீதிமன்றம் செல்வதற்காக மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த உரிமை 20வது திருத்தம் மூலம் பறிக்கப்படுகின்றது எனவும் பௌத்த மதகுருமார் தெரிவித்துள்ளனர்.

20வது திருத்தம் சட்டத்தின் ஆட்சியற்ற ஸ்திரமற்ற ஆட்சி பொறிமுறைக்கு வழிவகுக்கலாம் எனவும் பௌத்த மதத் தலைவர்கள் ஜனாதிபதிக்கான கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

20வது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு முன்னர் அதனை மீளாய்விற்கு உட்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

20வது திருத்தத்தை நிறைவேற்றுவதாகயிருந்தால் தாங்கள் முன்வைத்துள்ள கருத்துக்கள் குறித்து ஆராய வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad