20 ஆவது திருத்தம் தொடர்பில் நீதிமன்றத்தின் நிலைப்பாடு எதுவாக இருந்தாலும் அதனை செயற்படுத்துவோம் என்கிறார் ரோஹித அபேகுணவர்தன - News View

About Us

About Us

Breaking

Sunday, October 11, 2020

20 ஆவது திருத்தம் தொடர்பில் நீதிமன்றத்தின் நிலைப்பாடு எதுவாக இருந்தாலும் அதனை செயற்படுத்துவோம் என்கிறார் ரோஹித அபேகுணவர்தன

(இராஜதுரை ஹஷான்) 

அரசாங்கம் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் பாராளுமன்ற குழு விவாதத்தை தொடர்ந்து திருத்தம் செய்யப்படும். உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை முழுமையாக செயற்படுத்துவோம் என துறைமுக அபிவிருத்தி மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பில் எதிர்கட்சியினர் ஆரம்பத்தில் இருந்து சமூக மட்டத்தில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்து வருகிறார்கள். 

அரசியமைப்பின் 19 ஆவது திருத்தம் தொடர்பில் இவ்வாறான விமர்சனங்கள் எழுவதற்கு கூட அப்போதைய அரசாங்கம் காலவகாசம் வழங்கவில்லை. திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு இறுதியில் யார் பொறுப்பு என்பது கூட கேள்விக்குறியாக்கப்பட்டது. 

அரசியமைப்பின் 19 ஆவது திருத்தம் குறுகிய அரசியல் நோக்கங்களை கொண்டு உருவாக்கப்பட்டதால் அரச நிர்வாகம் பலவீனமடைந்தது. நாட்டு மக்கள் இத்திருத்தத்தை வெறுத்ததன் காரணமாகவே கடந்த அரசாங்கத்தை முழுமையாக புறக்கணித்தார்கள். 

19 வது திருத்தத்தின் குறைபாடுகளுக்கும், அரச நிர்வாகத்தை பலப்படுத்தும் ஒரு தீர்வாகவே அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் ஒரு தற்காலிக ஏற்பாடாக உருவாக்கப்பட்டுள்ளது. புதிய அரசியமைப்பினை உருவாக்குவதே அரசாங்கத்தின் பிரதான இலக்காகும். 

மேலும், அரசியமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடு எதுவாக இருந்தாலும் அதனை செயற்படுத்துவோம். வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள 20 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தின் குழுநிலை விவாதத்தை தொடர்ந்து திருத்தம் செய்யப்படும். என்பதில் உறுதியாக உள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment