20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற விவாதம் ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 20, 2020

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற விவாதம் ஆரம்பம்

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற விவாதம் ஆரம்பமாகியுள்ளது. இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகியிருந்தன.

இதன்போது, கொரோனா, பி.சி.ஆர். பரிசோதனை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பியிருந்தனர். இதன்காரணமாக அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து சபை அமர்வுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல ஒத்துழைப்பு வழங்குமாறு சபாநாயகர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையிலேயே 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற விவாதம் தற்போது ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இரவு 7.30 மணி வரை இந்த விவாதம் நடைபெறவுள்ளது.

நாளை இரவு 7.30 மணிக்கு விவாதம் முடிவடைந்ததும் குழு நிலை விவாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதன் பின்னர் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு 20ஆவது திருத்தச்சட்ட மூலம் வாக்கெடுப்புக்கு விடப்படும், சிலவேளை ’20’ நிறைவேறுவதற்கு இரவு 10 மணி கூட தாண்டக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்ட மூலத்திலுள்ள மேலும் ஒரு சரத்தால் (இரட்டைக்குடியுரிமை விவகாரம்) ஆளுங்கட்சிக்குள் குழப்பநிலை நீடிக்கின்றது.

இது தொடர்பில் இன்றைய தினமும் முக்கியத்துவமிக்க சந்திப்புகள் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சரவை எண்ணிக்கை, ஜனாதிபதியால் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான கால எல்லை, கண்காய்வுச் சட்டமூலம், அவசர சட்டமூலத்தை கொண்டுவருவதல் உள்ளிட்ட 20 ஆவது திருத்தச்சட்ட மூலத்தில் முக்கியமான சில விடயங்களை திருத்துவதற்கு நீக்குவதற்கு அரசாங்கத்துக்குள் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் பாராளுமன்றம் வர முடியும் என்ற ஏற்பாட்டை நீக்குவது தொடர்பில் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.

குறித்த ஏற்பாடு நீக்கப்பட வேண்டும் என விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, சிங்கள தேசியவாத அமைப்புகள் மற்றும் பௌத்த பீடங்கள் வலியுறுத்தியுள்ளன. அத்துடன், மேலும் சில பங்காளிக் கட்சிகளும் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

எனினும், அரசாங்கத்தால் 20 தொடர்பில் இதுவரையில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்களில் இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் பாராளுமன்றம் வர முடியும் என்ற ஏற்பாட்டை நீக்குவது தொடர்பில் எந்தவொரு ஏற்பாடும் இல்லை. எனவே, அந்த ஏற்பாட்டை அரசாங்கம் நீக்காது என்றே எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதனால் இறுதி நேரத்தில் ஆளுங்கூட்டணிக்குள் குழப்பநிலை உருவாகியுள்ளது. அந்த ஏற்பாடு நீக்கப்பட வேண்டும் என்பதில் விமல் அணி குறியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரண்டைக் குடியுரிமை கொண்டவர்கள் பாராளுமன்றம் வருவதற்கு அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment