மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1083 ஆக அதிகரிப்பு - அடையாளம் காணப்பட்ட இடங்களின் விபரம் உள்ளே - News View

About Us

About Us

Breaking

Saturday, October 10, 2020

மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1083 ஆக அதிகரிப்பு - அடையாளம் காணப்பட்ட இடங்களின் விபரம் உள்ளே

மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1083 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த கொத்தணியில் நேற்று (09) தொற்றுக்குள்ளான 35 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர். அவர்களில் ஐவர் வௌிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்களாவர்.

மினுவாங்கொடை தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களின் நண்பர்கள் 24 பேர், தொழிற்சாலையில் பணியாற்றுபவர், மேலும் மூவர் தொற்றுக்கு இலக்கான நிலையில் நேற்று அடையாளம் காணப்பட்டனர்.

இதேவேளை, எவரேனும் ஒருவர் செப்டம்பர் 23 ஆம் திகதியின் பின்னர் மினுவாங்கொடை Brandix தொழிற்சாலையின் ஊழியர்களை சந்தித்திருந்தால் PCR பரிசோதனையை மேற்கொள்ளுமாறு தொற்று நோயியல் விஞ்ஞானப் பிரிவு விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர கேட்டுக் கொண்டுள்ளார்.

மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் இருந்து அடையாளங்காணப்பட்ட பெருமளவிலானவர்கள் COVID-19 தொற்றுக்கான எவ்வித நோய் அறிகுறிகளும் இன்றி காணப்படுவதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் போதனா வைத்தியசாலையின் சுகாதார அலுவலக பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த ஊழியரை IDH வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளதாக சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜீ.விஜேசூரிய தெரிவித்தார்.

இதற்கு முன்னர் சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 10 மாதக் குழந்தைக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டதுடன், சிகிச்சை பெற்று வந்த மற்றுமொரு இரண்டரை மாதக் குழந்தையின் தந்தைக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. எனினும், அவர்கள் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகவில்லை என குறித்த வைத்தியசாலை நிர்வாகம் இன்று தெரிவித்தது.

இதேவேளை, கட்டுநாயக்க முதலீட்டு வலயத்தின் மூன்று தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் D.V.சானக்க தெரிவித்தார். குறித்த தொழிற்சாலைகளில் தொற்றுக்குள்ளானவர்களை சந்தித்ததன் காரணமாக தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் தொற்றுக்குள்ளானதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மினுவாங்கொடை - திவுலப்பிட்டியவை அண்மித்து ஆரம்பமான கொரோனா கொத்தணி தற்போது கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொது சுகாதார அதிகாரிகளின் சங்கம் தெரிவித்தது.

Brandix கொரோனா கொத்தணி பதிவானதன் பின்னர் தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்ட இடங்களாவன

1. சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை
2. பொரளை காசல் வீதி பெண்கள் வைத்தியசாலை
3. ஹொரணை ஆதார வைத்தியசாலை
4. வத்துபிட்டிவல முதலீட்டு வலயம்
5. கட்டுநாயக்க முதலீட்டு வலயம்
6. மினுவாங்கொடை பொலிஸ் நிலையம்
7. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம்
8. ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்

இதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்கள் இன்றும் காலை 8 மணிக்கு திறக்கப்பட்டன.

கம்பஹா, கனேமுல்ல, கிரிந்திவெல, தொம்பே, மல்வத்ஹிரிபிட்டிய, மீரிகம, நிட்டம்புவ, பூகொடை, வெயாங்கொடை, மினுவாங்கொடை, வீரகுல, வெலிவேரியா, பல்லேவெல, யக்கல, ஜா-எல, கந்தானை, திவுலப்பிட்டிய, சீதுவ ஆகிய பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

வீடுகளுக்கு அருகாமையிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு மாத்திரம் சென்று வருவதற்கு அந்தப் பகுதிகளிலுள்ள மக்கள் அனுமதிக்கப்படுவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறினார்.

இதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 97 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment