MT New Diamond கப்பலில் மீண்டும் தீ பிடித்தது - News View

About Us

About Us

Breaking

Monday, September 7, 2020

MT New Diamond கப்பலில் மீண்டும் தீ பிடித்தது

MT New Diamond கப்பலில் மீண்டும் தீ-MT-New-Diamond-Fire-Again
MT New Diamond எண்ணெய் தாங்கி கப்பலில் மீண்டும் தீப்பிடித்துள்ளதாக, இலங்கை கடற்படை பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

பாதுகாப்பான கடல் பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள குறித்த கப்பலில், இவ்வாறு தீப்பிடித்துள்ளது.

குறித்த கடற் பிரதேசத்தில் நிலவும் கடும் வெப்பம் மற்றும் காற்று காரணமாக, மீண்டும் அதில் தீ ஏற்பட்டுள்ளதாக, இந்திய கரையோர பாதுகாப்புப்படை உறுதிப்படுத்தியுள்ளது.

இன்று (07) பிற்பகல் அதில் இவ்வாறு மீண்டும் தீ ஏற்பட்டுள்ளதாகவும், தீயை அணைக்கும் பணி தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும், இந்திய கரையோர பாதுகாப்புப்படை, தனது ட்விற்றர் கணக்கில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குவைத்திலிருந்து சுமார் 270,000 மெற்ரிக் தொன் எரிபொருளுடன் பயணித்த குறித்த கப்பல் கடந்த வியாழக்கிழமை (03) முற்பகல் 8.00 மணியளவில் இலங்கைக்கு கிழக்கே அம்பாறை, சங்கமன்கண்டி கடற்பிரதேசத்திலிருந்து 38 கடல் மைல் தொலைவில் வைத்து, அதன் கொதிகலன் வெடித்ததைத் தொடர்ந்து தீப்பிடித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து அடுத்த நாள் (04) மாலை 7.00 மணி வரை, இந்திய கரையோரப் பாதுகாப்புப்படையுடன் இணைந்து, இலங்கை கடற்படை மற்றும் வான்படை இணைந்து மேற்கொண்ட தீயணைப்புப் பணியைத் தொடர்ந்து தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, இலங்கையிலிருந்து 25 கடல் மைல் தொலைவிற்கு அசைந்து வந்த குறித்த கப்பல் மீண்டும் பாதுகாப்பான கடல் பிரதேசத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே அதில் மீண்டும் தீப்பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment