கல்முனையில் இருந்து MT New Diamond கப்பல் பொறியியலாளர் இடமாற்றப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு வைக்கப்பட்டார் - News View

About Us

About Us

Breaking

Friday, September 11, 2020

கல்முனையில் இருந்து MT New Diamond கப்பல் பொறியியலாளர் இடமாற்றப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு வைக்கப்பட்டார்

தீ விபத்திற்கு உள்ளாகிய MT New Diamond கப்பலின் மாலுமி தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

கொரோனா தொடர்பான வழிகாட்டுதலுக்கு அமைய, அவர் கல்முனையிலிருந்து காலிக்கு அழைத்து வரப்பட்டதாகவும், அங்கிருந்து தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை ஊடக பேச்சாளர், கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.

இதற்கமைய குறித்த மாலுமி, கடற்படையினரை தனிமைப்படுத்தி வைக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். 

ஆறு நாட்களாக கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த கப்பலிலிருந்து மீட்கப்பட்ட 57 வயது மதிக்கத்தக்க, பிலிப்பைன்ஸ் பொறியியலாளர் எல்மோர் கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கடற்படையினரால் கடந்த வெள்ளிக்கிழமை (4) மீட்கப்பட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 3 மணிநேர சத்திர சிகிச்சை, சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ். சிறிநீதன் தலைமையிலான குழுவினரால் அளிக்கப்பட்டு பின்னர் அதிதிவீர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த புதன்கிழமை (09) இரவு கொழும்பு லங்கா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

அத்துடன், கப்பல் தீ விபத்து பற்றிய அனுபவத்தைக் கேட்டபோது இவ்வாறு பதிலளித்தார்.

'எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. செப்டம்பர் 03ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7.00 மணியளவில் வழமைபோல எழுந்தவுடன் உணவைப் பெறுவதற்காக கப்பலிலுள்ள சமையலறைக்குச் சென்றேன்.

அங்கு நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருந்தேன். சுமார் 15 நிமிட நேரத்தின் பின்னர் காலைக்கடன் கழிப்பதற்காக குளியலறைக்குச் சென்று கடன்களை முடித்துவிட்டு குளித்தேன்.

குளித்துவிட்டு வெளியேறியபோது கப்பலில் பாரிய வெடிச்சத்தம் கேட்டது. அவ்வளவுதான் வேறேதும் நினைவில்லை. யாரோ என்னைத் தாக்குவது போன்று உணர்ந்தேன்.

கப்பலில் ஒரு பகுதி எரிவதைக் கண்டேன். பின்பு எதுவும் நினைவில்லை. இருந்தும் இன்னும் நான் உயிர் வாழ்கிறேன்.

உண்மையில் இலங்கை மக்கள், இலங்கை கடற்படை, விமானப் படையினர் எல்லாம் பாராட்டுக்குரியவர்கள். குறிப்பாக கல்முனை ஆதார வைத்தியசாலை டாக்டர்கள், தாதிகள் ஏனையோர் என்னைப் பராமரித்தவிதம் மிகவும் கவர்ந்தது. வீட்டிலும் அப்படி கவனிப்பு இருக்காது. அந்தளவிற்கு கவனித்தார்கள். நன்றி என்றார்.

பாறுக் ஷிஹான்

No comments:

Post a Comment