நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருப்பதற்கு ஐ.நா உரிய முக்கியத்துவம் கொடுக்கும் என எதிர்பார்க்கிறோம் - ஜனாதிபதி கோத்தாபய - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 22, 2020

நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருப்பதற்கு ஐ.நா உரிய முக்கியத்துவம் கொடுக்கும் என எதிர்பார்க்கிறோம் - ஜனாதிபதி கோத்தாபய

ஏனைய நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை உரிய முக்கியத்துவம் கொடுக்கும் என்று எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். 

நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 75 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் உயர் மட்டக் கூட்டத்தில் காணொளி தொழிநுட்பத்தின் ஊடாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். 

இதன்போது ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை வருமாறு பொதுச் சபையின் 75 வது கூட்டத் தொடரின் தலைவர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள வோல்கன் பொஸ்கருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன். 

இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணத்தில் இலங்கை மக்களை பிரதிநிதித்துவம் செய்வதற்கு கிடைத்தமை எனக்கு கிடைத்த மாபெரும் கௌரவமாகும். 

துரதிஷ்டவசமாக, 75 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கௌரவமான சபையை ஆரம்பித்தவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் மாற்றமானதாகவே இன்றைய உலகம் காணப்படுகின்றது. 

ஒரு சில மாதங்களுக்குள் எமது பொருளாதாரம், சுகாதார கட்டமைப்பு மற்றும் முழுமையாக எமது சமூக செயற்பாடுகளை இடை நிறுத்திய, முன்னர் எப்போதும் இருக்காத கொவிட்-19 நோய்த் தொற்றினால் முழு உலகும் பாதிக்கப்பட்டுள்ளது. 

அறிவார்ந்த செயற்பாடுகளின் மூலம் கொவிட்-19 சவாலுக்கு வெற்றிகரமாக இலங்கை முகங்கொடுத்தது. இலங்கையில் முதலாவது நோயாளியை இனங்காண்பதற்கு முன்னராகவே நாம் கொவிட்-19 தேசிய நிவாரண செயற்பாட்டுக் குழுவை ஸ்தாபித்தோம். 

பாதுகாப்பு தரப்பினர், சுகாதார, தேசிய மற்றும் பிரதேச மட்டத்தில் சிவில் அதிகாரிகள் அனைவரையும் உள்ளடக்கிய வகையிலேயே எமது முன்னெடுப்புகள் அமைந்திருந்தன. இலங்கையில் கொவிட்-19 நோயாளிகள் குணம் அடையும் வீதம் நூற்றுக்கு 90 ஐ விடவும் அதிகமாக உள்ளதுடன் அது உலகின் குணம் அடையும் வீதத்தின் உயர் நிலையாகும். 

எமது பலமான சக்தியாக அமைந்த 'தடமறிதல் மற்றும் தனிமைப்படுத்தல்' என்பதே எமது வெற்றிக்கான காரணங்களாகும். கடந்த ஒரு மாத காலத்தில் எந்தவொரு கொரோனா தொற்றுக்குள்ளானவரும் நாட்டினுள் இனங்காணப்படவில்லை. 

பேண்தகு அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலை 2030 இல் அடைந்து கொள்வதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது. விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி பொருளாதாரத்தின் மூலம் வறுமையை ஒழிப்பது எனது அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும். 

நாம் வருடத்தின் ஆரம்பத்தில் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதற்காக எடுத்த பல்வேறு நடவடிக்கைகளான இறக்குமதியை கட்டுப்படுத்தல் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர தொழிற்முயற்சியாளர்களுக்கு சலுகைகளை வழங்குவதன் மூலம் எதிர்பார்த்த பிரதிபலன்களை அடைந்துகொள்ள முடிந்துள்ளது. 

இலங்கை ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் பெற்று 65 ஆண்டுகளை கொண்டாடுகின்ற இச்சந்தர்ப்பத்தில், நாம் ஐக்கிய நாடுகள் நிகழ்ச்சி நிரலுக்கு பங்களிக்க கிடைத்தமையை ஒரு பாக்கியமாக கருதுகின்றோம். 

இலங்கை ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையினருடன் இணைந்து செயற்பட்டதோடு சபையின் பலவேறு விசேட நிறுவன திட்டங்களுக்கும் பங்களித்துள்ளது. 

'உலகம் ஒரு பொதுவானதும் நிகரற்றதுமான அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் ஒரு சந்தர்ப்பத்தில், 'எமக்குத் தேவைப்படும் ஐக்கிய நாடுகள் சபை', என்ற சுலோகம் நாடுகளின் இறையாண்மை சமத்துவத்திற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கும் என்றும் ஆள்புல ஒருமைப்பாட்டினை மதித்து அவர்களின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருப்பதற்கும் உரிய கவனம் செலுத்தும் என்று நான் நம்புகின்றேன். 

ஒரு சிலரின் தேவைக்கு எந்தவொரு நாட்டையும் பணயக் கைதியாக்காமல் இருப்பதன் மூலமே அங்கத்துவ நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு இடையிலான பங்களிப்புக்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மேலாண்மையையும் நிலைத் தன்மையையும் இயன்றளவு அடைந்துகொள்ள முடியுமாக இருக்கும் என்பது எனது உறுதியான நம்பிக்கையாகும். 

ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடான இலங்கை எமக்கு அவசியமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக இந்த சிறப்புமிக்க அமைப்பை பலப்படுத்துவதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றியளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றது. எமது மக்களுக்கும், எதிர்கால சந்ததியினருக்கும் அதன் பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம் என்றார்.

பொதுச் சபையின் 75 வது அமர்வின் தலைவர் வோல்கன் போஸ்கிர் மற்றும் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ் ஆகியோர் இக்கூட்டத்தின் ஆரம்ப மற்றும் இரண்டாவது உரைகளை நிகழ்த்தினர். 

180 நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் வீடியோ தொழிநுட்பத்தின் ஊடாக மாநாட்டில் உரைகளை நிகழ்த்தினர்.

No comments:

Post a Comment