பதினெட்டு வயது நிரம்பிய ஒவ்வொருவரும் தங்களை வாக்காளர்களாகப் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் - மாவை சேனாதிராசா - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 9, 2020

பதினெட்டு வயது நிரம்பிய ஒவ்வொருவரும் தங்களை வாக்காளர்களாகப் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் - மாவை சேனாதிராசா

பதினெட்டு வயது நிரம்பிய ஒவ்வொருவரும் தவறாது தங்களை வாக்காளர்களாகப் பதிந்து கொள்ள வேண்டும் எனவும் பதிவு செய்தவர்கள் வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர்கள் உள்ளனவா என்றதையும் உறுதிப்படுத்த வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா தெரிவித்துள்ளார். 

வாக்காளர்களை பதிவு செய்தல் மற்றும் உறுதிப்படுத்தல் தொடர்பில் தேர்தல் ஆணையகம் எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பதிவுகளை மேற்கொள்ளல் தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வாக்காளர்களாகப் பதியுங்கள் இது ஒரு ஜனநாயகக் கடமை, உரிமை 2020 செப்டம்பர் முதலாம் தொடக்கம் முதல் மக்கள் தங்களை வாக்களர்களாகப் பதிவு செய்வதற்கு அரசு தரப்பினால், தேர்தல் ஆணையகத்தினால் அறிவித்தல் தரப்பட்டுள்ளது. 

பதினெட்டு வயது நிரம்பிய ஒவ்வொருவரும் தவறாது தங்களை வாக்காளர்களாகப் பதிந்து கொள்ள வேண்டும். பதிந்துள்ளவர்கள் தங்களின் பெயர்கள் தொடர்ந்தும் பதிவிலுள்ளனவா என்பதைச் சரி செய்து மீண்டும் பதிவு செய்து கொள்ள வேண்டும். 

சென்ற ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்தவர்களின் பெயர்கள் 2020 பொதுத் தேர்தலில் வாக்களிக்கப் பெயரில்லாமல் போயுள்ளன என முறையிட்டுள்ளனர். குறிப்பாக வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் போர் காரணமாக இடப்பெயர்வுகள் காரணமாக பதிவு இடம்பெறாமலும் அல்லது பதிந்துள்ளவர்கள் மீளவும் இடம்பெயர்வின் போது, வதிவிடங்களை மாற்றியிருக்கும் நிர்ப்பந்தத்தினால் பதிவுகளை இழந்தும் இருக்கும் நிலை அவதானிக்கப்பட்டுள்ளன. 

இன்னும் பிற நாடுகளுக்கும் குறிப்பாக இந்தியா, தமிழ் நாட்டுப் பிரதேசங்களிலும், முகாம்களிலும் அகதிகளாக உள்ளவர்கள் இலங்கையில் வாக்காளர்களாக பதிவு செய்வதற்கு உரித்துடையவர் ஆவார். அவர்களின் வாக்குரிமையைத் தொடர்ந்தும் பேண வேண்டும். அவ்வாறான உயிருடன் வாழ்பவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் பேண நடவடிக்கை தொடர வேண்டும். அதற்கு உரித்துண்டு. அவ்வாறான பெயர்களை நீக்க இடமளிக்கக் கூடாது. 

தற்போது கிராம சேவையாளர்கள் வாக்காளர் பட்டியல்களை வீடு வீடாக விநியோகிக்கும் போது அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கிராம சேவையாளர்களுடன் செயலாற்றலாம். அவ்வாறான பிரதிநிதிகள் விநியோகிக்கப்படும் வாக்காளர் பெயர் பட்டியல்களைப் பரிசீலித்துத் தவறுகளிருப்பின் திருத்திக் கொள்ளவும், பதிவு இல்லையாயின் அல்லது புதிதாகப் பதிய வேண்டியிருப்பின் அப் பெயர்களைப் பதியவும் வேண்டும். பதிவதில் அல்லது திருத்தங்களின் போது தடைகளேற்படின் அவை தொடர்பில் முறைப்பாடுகளை மேற்கொண்டு சரி செய்ய உதவ வேண்டும். 

குறிப்பாக வலி வடக்குப் பிரதேசங்களில் மீள்குடியேற்றப்படாதுள்ளோரும் தங்கள் தங்கள் உரித்துள்ள பகுதிகளில் பதிய நடவடிக்கை எடுக்கவும் வேண்டும். குறிப்பாக வடக்குக் கிழக்குப் பகுதிகளிலும், போரினால் பாதிக்கப்பட்டதும் மீள் குடியேற்றப்பகுதிகளாயுமுள்ள பிரதேசங்களில் மக்கள் பிரதிநிதிகளாயுள்ளோர் உடன் செயலாற்ற வேண்டுமென வலியுறுத்துகின்றோம். இது எங்கள் ஜனநாயகக் கடமை, ஜனநாயக உரிமையாகும்.

No comments:

Post a Comment