
எஸ்.எம்.எம்.முர்ஷித்
அரசாங்கத்தின் நோக்கங்களையும் எதிர்பார்ப்புக்களையும் வினைத்திறனாகவும் விளைத்திறனாகவும் நிறைவேற்றுவீர்கள் என்ற எதிர்பார்ப்பு அரசாங்கத்திடம் உள்ளதென ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர் தெரிவித்தார்.
புதிதாக நியமனம் பெற்ற பட்டதாரிகளை வரவேற்கும் நிகழ்வு ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் புதன்கிழமை (02.09.2020) நடைபெற்ற போது, தலைமை உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பல்வேறு பட்டதாரிகள் இருக்கும் நிலையில், தங்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைத்தது பாரிய வரப்பிரசாதமாகும். அந்த வகையில், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயிற்சிநெறியில் முழுமையாக பங்கெடுக்காத சமயத்தில் உங்களுடைய நியமனத்தினை உறுதிப்படுத்தும் பட்சத்தில் பாரிய சிக்கல்கள் தோன்றுவதற்கு வாய்ப்புக்களுண்டு. எனவே, இவ்வாறான விடயங்களுக்கு முகங்கொடுக்காமல் பயிற்சிநெறியினை திறம்பட மேற்கொள்வது தங்களுக்கு அவசியமாகும் என்றார்.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வழங்கும் செயற்றிட்டத்திற்கு அமைவாக நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்ட பட்டதாரிகள் பிரதேச செயலகங்கள் தோறும் தங்களது கடமைகளைப் பொறுப்பேற்றனர்.
அந்த வகையில், ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் தெரிவு செய்யப்பட்ட அறுபத்தொரு (61) பட்டதாரிகளில் ஐம்பத்தொன்பது (59) பட்டதாரிகள் தங்களுக்கான நியமனங்களைப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில், செயலக கணக்காளர் ஐ.எஸ்.சஜ்ஜாத் அஹமட், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எம்.றுவைத், நிருவாக உத்தியோகத்தர் எஸ்.அப்துல் ஹமீட் மற்றும் கடமையை பொறுப்பேற்ற பட்டதாரிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment