மஹிந்த - மோடி இடையிலான இணையவழி மாநாடு சனிக்கிழமை - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 23, 2020

மஹிந்த - மோடி இடையிலான இணையவழி மாநாடு சனிக்கிழமை

(நா.தனுஜா) 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் இணையவழி மாநாட்டின் போது பிராந்திய மற்றும் சர்வதேச ரீதியிலான பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்படும் என்று இரு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சுக்கள் தெரிவித்திருக்கின்றன. 

புதிய அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இணையவழி இரு தரப்பு கலந்துரையாடல் எதிர்வரும் சனிக்கிழமை (26.09.2020) ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 

இந்த கலந்துரையாடலின் போது பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்படும் என்று இலங்கையினதும் இந்தியாவினதும் வெளிவிவகார அமைச்சுக்கள் தெரிவித்திருக்கின்றன. 

புதிய பிரதமராக நியமனம் பெற்ற மஹிந்த ராஜபக்ஷவிற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி தொலைபேசி ஊடாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்தார். 

இதன்போது இணையவழி மாநாடொன்றின் மூலமாக இரு தரப்பு நல்லுறவு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடுவதற்கு இரு நாட்டுத் தலைவர்களும் இணங்கினர் என்று வெளிவிவகார அமைச்சு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. 

அந்த வகையில் எதிர்வரும் சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாட்டின் போது அரசியல், பொருளாதாரம், நிதி, அபிவிருத்தி, பாதுகாப்பு, கல்வி, சுற்றுலாத்துறை, கலாசாரம், பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அமைச்சு தெரிவித்திருக்கிறது. 

அதேவேளை இலங்கையில் பொதுத் தேர்தல் முடிவடைந்ததன் பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நல்லுறவு மற்றும் செயற்திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்வதற்கான வாய்ப்பை இந்த இணையவழி மாநாட்டின் ஊடாக இரு நாட்டுத் தலைவர்களும் பெற்றுக் கொள்வர் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு நம்பிக்கை வெளியிட்டிருக்கிறது. 

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் வெளிநாட்டுத் தலைவர் ஒருவருடன் முன்னெடுக்கவிருக்கின்ற முதலாவது இணையவழி மாநாடு இதுவென்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment