20 ஆவது திருத்தம் தொடர்பில் பிரதமரின் நிலைப்பாடு என்ன என கேட்கின்றோம் ? : கபீர் ஹாசிம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 23, 2020

20 ஆவது திருத்தம் தொடர்பில் பிரதமரின் நிலைப்பாடு என்ன என கேட்கின்றோம் ? : கபீர் ஹாசிம்

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்) 

20ஆது திருத்தம் மூலம் பாராளுமன்றத்தில் பிரதமரின் அதிகாரம் இல்லாமலாக்கப்படுகின்றது. அதனை தடுக்கவும் ஜனநாயகத்தை பாதுகாக்கவுமே அரசியலமைப்பின் இருபதாவது திருத்தத்தை எதிர்க்கின்றோம். அத்துடன் 20 தொடர்பில் பிரதமரின் நிலைப்பாடு என்ன என கேட்கின்றோம் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஆரம்பத்திலே வட் வரியை 47 வீதம் குறைத்தது. இந்த வரி குறைப்பினால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. பொருட்களின் விலையில் ஒரு ரூபாவை கூட குறைப்பதற்கு அரசாங்கத்துக்கு முடியவில்லை. வரி குறைப்பினால் கிடைக்கப் பெற்ற இலாபம் யாருடைய பொக்கெட்டுக்கு சென்றது என கேட்கின்றோம். 

மேலும் தற்போதைய அரசாங்கம் கடந்த காலங்களில் இருந்து ஆட்சிக்கு வரும்போது மக்களுக்கு அளித்த பிரதான வாக்குறுதி, ஜேஆரின் அரசியலமைப்பை இல்லாமலாக்குவதாகும். 

2005 இல் மஹிந்த ராஜபக்ஷ் ஜனாதிபதியாக தெரிவாகும்போதும் இந்த வாக்குறுதியை வழங்கியிருந்தார். ஆனால் 2010 இல் 18ஆம் திருத்தத்தை கொண்டுவந்து, நிறைவேற்று அதிகாரத்தை மேலும் அதிகரித்துக் கொண்டார். ஆனால் நாங்கள் 19ஆம் திருத்தத்தை கொண்டுவந்து அதிகார பரவாலாக்களை ஏற்படுத்தினோம். ஜனாதிபதியின் அதிகாரங்களை பாராளுமன்றத்துக்கு பெற்றுக் கொடுத்து ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி இருக்கின்றோம். 

அவ்வாறு இருக்கையிலேயே தற்போது 20ஆவது திருத்தத்தை கொண்டுவந்து பாராளுமன்றத்தில் பிரதமருக்கு இருக்கும் அதிகாரம் இல்லாமலாக்கப்பட்டு மீண்டும் நிறைவேற்று அதிகாரத்தை ஜனாதிபதிக்கு கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. 

நாங்கள் 20ஆம் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது எங்களுடைய தேவைக்கு மாத்திரமல்ல, அரசாங்கத்தின் அதிகாரத்தையும் பாதுகாப்பதற்காகும். அதனால் நாட்டின் ஜனநாயகம் மற்றும் பாராளுமன்றத்தின் இறையாண்மைக்கு எதிரான 20ஆவது திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது அனைவரதும் கடமையாகும். அத்துடன் 20ஆவது திருத்தம் தொடர்பில் பிரதமர் தனது நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment