தலைமுடியால் வந்த வினை! அதிபர் மீது தாக்குதல் முயற்சி, போராட்டத்தில் குதித்த மாணவர்கள் மற்றும் பெற்றோர் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 24, 2020

தலைமுடியால் வந்த வினை! அதிபர் மீது தாக்குதல் முயற்சி, போராட்டத்தில் குதித்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்

கிளிநொச்சி ஊற்றுப்புலம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் இன்று போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்று காலை 8 மணியளவில் பாடசாலை பிரதான வாயிலை மறித்து இடம்பெற்றது. 

நேற்று புதன்கிழமை பாடசாலை அதிபரை ஒரு தரப்பினர் தாக்க முற்பட்டதாக தெரிவித்து தமது பிள்ளைகள், அதிபர் ஆசிரியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி தருமாறு கோரியே குறித்த போராட்டம் இடம்பெற்றது. 

பாடசாலை மாணவர்களின் பெற்றோரால் குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் பாடசாலையின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் ஒன்றரை மணி நேரம் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

விடயம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, 262 பாடசாலை மாணவர்களை கொண்ட குறித்த பாடசாலையில் தரம் ஒன்று முதல் சாதாரண தரம் வரை கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது. அதற்காக அதிபர் அடங்கலாக 19 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் குறித்த பாடசாலையில் கடமையாற்றுகின்றனர். 

இவ்வாறான நிலையில் நேற்று புதன்கிழமை பாடசாலை மாணவர் ஒருவரை தலைமுடியை சீராக்கி பாடசாலைக்கு வருமாறும், பாடசாலை ஒழுக்க விதிகளை பேணுமாறும் பாடசாலை அதிபரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இவ்வாறான நிலையில் குறித்த மாணவனின் சகோதரர் பாடசாலை நேரத்தில் அதிபரின் அலுவலகத்திற்குள் நுழைந்து தாக்குதல் மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டுள்ளதாகவும், தடுக்க முற்பட்ட ஆசிரியரில் ஒருவர் தாக்கப்பட்டுள்ளதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர். 
இவ்வாறான நிலையில் தமது பிள்ளைகளின் கல்வி பாதிப்படையாதவாறு அதிபர், ஆசிரியர்களை பாதுகாத்து தருமாறு கோரியே பெற்றோர் மற்றும் மாணவர்களால் பிராத வாயிலை மூடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

குறித்த பகுதிக்கு வருகை தந்திருந்த கிளிநொச்சி கோட்டக் கல்வி அதிகாரி தர்மரட்ணம் மற்றும் கிளிநொச்சி பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பொலிசார் பெற்றோரிடம் வாக்குறுதி வழங்கியுள்ளனர். 

பாடசாலையின் கௌரவத்தை பாதுகாக்குமாறும், உரிய சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் கிளிநொச்சி கோட்டக் கல்வி அதிகாரி தர்மரட்ணம் கிளிநொச்சி பொலிசாரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார். 

இதனையடுத்து போராட்டம் கைவிட்டதுடன் குறித்த பாடசாலையின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் வழமைபோன்று இடம்பெற்றதுடன், அச்சுறுத்தலுக்குள்ளான பாடசாலை அதிபர் இன்றையதினம் சமூகமளித்திருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அதேவேளை இவ்வாறான அச்சுறுத்தல்கள் மத்தியில் கடமைகளை சீராக செய்ய முடியாத மனநிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆசிரியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment