இலங்கைக்கு உள்நாட்டில் கொள்வனவு செய்யப்பட்ட தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை அன்பளிப்பு செய்தது அமெரிக்கா - News View

About Us

About Us

Breaking

Thursday, September 24, 2020

இலங்கைக்கு உள்நாட்டில் கொள்வனவு செய்யப்பட்ட தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை அன்பளிப்பு செய்தது அமெரிக்கா

கொவிட் 19 இற்கான இலங்கையின் பதிலளிப்பு நடவடிக்கைகளில் அதற்கு தொடர்ந்து வழங்கப்பட்டுவரும் அமெரிக்க உதவியின் ஓரங்கமாக இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி. டெப்லிட்ஸ் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை (Personal Protective Equipment - PPE) இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியிடம் நேற்று (23.09.2020) அன்பளிப்பு செய்தார். 

23,000 முகக்கவசங்கள், 24,000 நைட்ரைல் கையுறைகள், தொப்பியுடன் கூடிய 600 தனிமைப்படுத்தல் அங்கிகள், 60 அகச்சிவப்பு வெப்பமானிகள், எளிதாக எடுத்துச் செல்லக்கூடிய 50 ஒட்சிசன் செறிவூட்டிகளுடன் அவற்றின் செயற்பாட்டுக்கு தேவையான கைவிடப்படக்கூடிய பெருந்தொகையான உபகரணங்கள் மற்றும் தொற்றுநீக்கிகள் என்பன இந்த அன்பளிப்பில் உள்ளடங்குகின்றன. 

இந்த நன்கொடையின் மொத்த பெறுமதி 191,000 அமெரிக்க டொலர்களாகும். இந்த நன்கொடைக்கு அமெரிக்க பாதுகாப்பு திணைக்களம் நிதியுதவி செய்துள்ளது. 

கொவிட்-19 இன் பொருளாதார தாக்கத்தில் இருந்து இலங்கையின் உள்நாட்டு வர்த்தகங்கள் மற்றும் தொழில்துறை என்பன மீட்சி பெற்று வருகின்றன என்ற வகையில் அவற்றுக்கு உதவுவதற்கான அமெரிக்காவின் முயற்சிகளுக்கு அமைவாக இந்த அனைத்து பொருட்களும் உள்நாட்டிலேயே வாங்கப்பட்டன. 

ஆடைக் கைத்தொழில்துறை மற்றும் இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்தி சபையுடனான தமது தனியார்துறை தொடர்புகளின் ஓரங்கமாக, அமெரிக்க சந்தையை அணுகுவதில் புதிய ஏற்றுமதியாளர்களுக்கு உதவிய ஆற்றல் மேம்பாட்டு பயிற்சிகளுக்கும் அமெரிக்கா நிதியுதவி வழங்கியுள்ளது. 

“இலங்கையர்களின் சுகாதாரம் மற்றும் நலனை பாதுகாத்தல் மற்றும் இலங்கை தொழில்வாய்ப்புகளுக்கு உதவியளித்தல் என்ற பகிரப்பட்ட இரு இலக்குகளை அமெரிக்க மக்களிடமிருந்தான இந்த அன்பளிப்புகள் வெற்றிகரமாக நிறைவேற்றுகின்றன,” என்று தூதுவர் டெப்லிட்ஸ் தெரிவித்தார். 
“இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவும் நிலையான உதவியை வழங்குவதானது அமெரிக்க - இலங்கை பங்காண்மையின் ஒரு தனிச்சிறப்பம்சமாகும்,” என்றும் அவர் குறிப்பிட்டார். 

இலங்கையில் மட்டும், கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்கா 26 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான சுகாதார உதவிகளை வழங்கியுள்ளதுடன், இந்த புதிய நன்கொடையானது 2020 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட 6 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான கொவிட்-19 உதவிக்கு மேலதிகமானதாகும். 

உயிர்களை காக்கக்கூடிய தரமான பராமரிப்பை வழங்குவதற்கு இலங்கையின் சுகாதார வழங்குனர்களுக்கு உதவும் புத்தம் புதிய உயர்தரமான 200 செயற்கை சுவாசக் கருவிகளை (வென்டிலேட்டர்) அமெரிக்க மக்களின் சார்பாக தூதுவர் அண்மையில் கையளித்தார். 

அதேநேரம், கொவிட்-19 பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான ஏழு முக்கிய படிப்பினைகளை பின்பற்றுவதற்கு பிள்ளைகள் மற்றும் பெற்றோரை ஊக்குவிக்கும் தேசிய ஊடக பிரசாரமொன்றிற்கு உதவுவதன் ஊடாக இலங்கை பிள்ளைகள் அவர்களது பாடசாலை கல்வியை மீள ஆரம்பிப்பதற்கும் அமெரிக்க மக்கள் உதவி வருகின்றனர். 

உலகின் மிகப்பெரிய இருதரப்பு சுகாதார உதவி வழங்குனர்களில் ஒன்றாக அமெரிக்கா தொடர்ந்தும் இருந்து வருகிறது. 2009 ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்க மக்கள் 100 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான சுகாதார உதவிகளுக்கும் சுமார் 70 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான மனிதாபிமான உதவிகளுக்கும் உலகளவில் தாராளமனப்பான்மையுடன் நிதியுதவியளித்துள்ளனர்.

No comments:

Post a Comment