என்மீது பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவிப்பது அனுதாபத்தை பெற்றுக் கொள்வதற்காகும் - தலதா அத்துகோரள - News View

Breaking

Post Top Ad

Thursday, September 10, 2020

என்மீது பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவிப்பது அனுதாபத்தை பெற்றுக் கொள்வதற்காகும் - தலதா அத்துகோரள

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்) 

2001 இல் இடம்பெற்ற கொலை தொடர்பில் 20 வருட காலமாக வழக்கு நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாமல் தற்போது என்மீது பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவிப்பது அனுதாபத்தை பெற்றுக் கொள்வதற்காகும். நீதி அமைச்சராக இருந்து நான் ஒருபோது நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட்டதில்லை என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்தார். 

பாராளுமன்றம் நேற்றுமுன்தினம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகளை தொடர்ந்து வரப்பிரசாத மீறல் தொடர்பாக விசேட உரையொன்றை மேற்கொண்டு தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிபிப்பிட்டார். 

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டவர் என்ற வகையில் பிரேமலால் ஜயசேகரவின் மனநிலையை என்னால் உணர்ந்து கொள்ள முடியும். என்றாலும் செவ்வாய்க்கிழமை இந்த சபையில் அவரால் நிகழ்த்தப்பட்ட உரையில் என்னை தொடர்புபடுத்தி தெரிவித்த கருத்தினால் எனது வரப்பிரசாதம் மீறப்பட்டிருக்கின்றது. 

2001ஆம் ஆண்டு இடம்பெற்ற அவரது உறவினர் ஒருவரின் கொலை தொடர்பாக என்மீது குற்றம் சாட்டியிருந்தார். அந்த காலத்திலும் அவர் அரசாங்க தரப்பை பிரதிநிதித்துவப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினராக 2014ஆம் ஆண்டு வரை செயற்பட்டார். 

அத்துடன் நானும் 2004ஆம் ஆண்டில் இருந்து பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றேன். பாராளுமன்ற உறுப்பினர் வரப்பிரசாதங்களை பயன்படுத்தி என்மீது பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவிக்காமல், அவர் இருந்த அரசாங்கத்தில் முறையான விசாரணை மேற்கொண்டு வழக்கு நடவடிக்கையை ஏன் மேற்கொள்ளவில்லை?. 

20 வருடங்களுக்கு பின்னர் தற்போது என்மீது பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து, அவர் தொடர்பில் அனுதாபங்களை பெற்றுக் கொள்வதற்காக முயற்சிக்கின்றார். அதேபோன்று அவருக்கு தண்டனை பெற்றுக் கொடுக்காவிட்டால் நான் கொழுந்து பறிக்கச் செல்வதாக நான் தெரிவித்ததாக அவரினால் தெரிவிக்கட்ட விடயம் தொடர்பில் நான் கவலையடைகின்றேன். 

நூறு வடங்களுக்கு மேற்பட்ட காலம் எனது பரம்பரையினர் தோட்ட உரிமையாளர்களாக செயற்பட்டு வருவதுடன் நாங்கள் தோட்டங்களினால் வரும் வருமானத்திலே வாழ்ந்து வருகின்றோம். தோட்டங்களில் வேலை செய்யும் அப்பாவி பெண்கள் கொழுந்து பறித்து ஒத்துழைப்பு வழங்கியதாலே நாங்கள் இந்த நிலைக்கு வந்திருக்கின்றோம். கொழுந்து பறிப்பது தொடர்பில் எனக்கு எந்த அனுபவமோ நிபுணத்துவமோ இல்லை. அதனால் நான் ஒருபோதும் இந்த நிலைக்கு செல்லமாட்டேன். என்னை அந்த நிலைக்கு என்னை ஆக்கவும் யாருக்கும் முடியாது. 

மேலும் 2017 ஆகஸ்ட் மாதம் நான் நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டேன். அப்போதும் பிரேமல் ஜயசேகரவுக்கு எதிரான வழக்கு விசாரணையில் இருந்தது. ஆனால் இது தொடர்பாக நான் நீதிவான்களுடனோ சட்டமா அதிபர் திணைக்களத்தினுடனோ கலந்துரையாடவில்லை என்பது அவர்களுக்கு தெரியும். அதனால் கெளரவமான அரசியல் செய்யும் நான் ஒருபோதும் கீழ்மட்ட அரசியல் செய்ததும் இல்லை, செய்யப்போவதும் இல்லை. 

ஆனால் வழக்கு விசாரணையில் 42 சாட்சிகளிடம் சாட்சி விசாரித்தே நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருக்கின்றது என்பதை தீர்ப்பின் மூலம் விளங்கிக் கொள்ளலாம். எனவே எனது உறவினர் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பதால் அது தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள சட்டத்தரணிகளை தனிப்பட்ட ரீதியில் முன்னிலைப்படுத்தினேனே தவிர, நீதி அமைச்சர் என்ற வகையில் ஒருபோதும் எனது அதிகாரத்தை பயன்படுத்தி எந்த தலையீட்டையும் மேற்கொண்டதில்லை என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad