இயற்கை வளங்களைப் பாதுகாக்க தேசிய பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை, இராணுவத்தில் இருப்பவர்கள் வெளிநாட்டவர்கள் அல்ல - இராணுவத் தளபதி - News View

Breaking

Post Top Ad

Thursday, September 10, 2020

இயற்கை வளங்களைப் பாதுகாக்க தேசிய பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை, இராணுவத்தில் இருப்பவர்கள் வெளிநாட்டவர்கள் அல்ல - இராணுவத் தளபதி

இயற்கை வளங்களைப் பாதுகாக்க தேசிய பாதுகாப்பு குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டுமென இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். 

திருகோணமலையிலுள்ள 22 ஆவது படைப்பிரிவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது நாட்டின் பொருளாதாரத்திற்கு வரலாற்று முக்கியத்துவப் பங்களிக்கும் பிரதேசம் திருகோணமலையாகும். நாட்டில் நிலவிய 30 வருட யுத்தத்திலிருந்து திருகோணமலை பிரதேசத்தை பாதுகாப்பதற்காக முப்படையினர் சிறப்பாக செயற்பட்டனர்.

ஈஸ்டர் தாக்குதலைப் போன்ற அடிப்படைவாத தாக்குதல்கள் இனிமேலும் இடம்பெறாமல் இருப்பதற்கு முப்படையினரும் பல ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோன்று இராணுவத்தினர் பொதுமக்களின் நன்மை கருதி, சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோன்று கொவிட் 19 தனிமைப்படுத்தல் விடயத்திலும் பாரிய சேவைகளை எமது படையினர் செய்து வருகின்றனர் என்றார். 

இதேவேளை ஹெரோயின் கடத்தல் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், இராணுவத்தில் இருப்பவர்கள் வெளிநாட்டவர்கள் அல்ல. அவர்களும் இலங்கையரே. சீருடை அணிந்து இருந்தாலும் அவர்களும் எமது நாட்டவர்களே.

எனினும் போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுடன் இராணுவத்தில் உள்ள சிலரும் தொடர்பு படுத்தப்படுகின்றனர். இனிவரும் காலங்களில் போதைப் பொருள் தொடர்பில் யாராவது இனங்காணப்பட்டால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரொட்டவெவ குறூப் நிருபர்

No comments:

Post a Comment

Post Bottom Ad