தோட்டத் தொழிலாளர்களுக்கே காணிகள் வழங்கப்பட வேண்டும், ஆசிரிய உதவியாளர்களுக்கு நியமனம் வழங்கப்பட வேண்டும் - வேலு குமார் - News View

Breaking

Post Top Ad

Thursday, September 10, 2020

தோட்டத் தொழிலாளர்களுக்கே காணிகள் வழங்கப்பட வேண்டும், ஆசிரிய உதவியாளர்களுக்கு நியமனம் வழங்கப்பட வேண்டும் - வேலு குமார்

பெருந்தோட்டத் துறையை முன்னேற்றுவதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பெருந்தோட்டத் துறை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் தலைமையில் விசேட கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த வேலுகுமார் எம்.பி. பெருந்தோட்டத் துறையில் நிலவும் பிரச்சினைகளை இனங்கண்டு அதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க அந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது என்றும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் அந்த கூட்டத்தில் பெருந்தோட்டத் துறை தோட்டங்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு பகிர்ந்தளிப்பது தொடர்பில் பேசப்பட்டதாக அறிய முடிகிறது. அவ்வாறு பகிரப்படும் போது சுமார் 150 வருடங்கள் அத்துறையில் ஈடுபட்டுள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு அவை பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று நிதியமைச்சின் உற்பத்தி வரி திருத்தம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். 

அவர் அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே பெருந்தோட்டத் துறை நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பை வழங்கி உள்ளது. ஏற்றுமதி துறை அந்நிய செலாவணியை பெற்றுக் கொடுப்பதில் தேயிலைத் தொழில்துறை முக்கிய பங்கை வகித்துள்ளது.

எனினும் மாறி மாறி வரும் அரசாங்கங்கள் இக்கரைக்கு அக்கரை பச்சை போன்று பெருந்தோட்டத் துறை முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவதில்லை. வேறு துறைகளுக்கு செலுத்தப்படும் அவதானம் பெருந்தோட்டத் துறையில் செலுத்தப்படுவதில்லை. அதனால் அந்த மக்கள் போதிய வருமானத்திற்கான வழியின்றி கஷ்டப்படுகின்றனர்.

அதேவேளை அரசாங்கம் ஐம்பதாயிரம் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நிலையில் மலையகத்தில் ஆசிரிய உதவியாளர்களாக சேவையில் உள்ள மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு ஆசிரிய நியமனம் வழங்கப்பட வேண்டும் அதற்காக அவர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

அதற்கான அனைத்து தகைமைகளும் அவர்களுக்குள்ள நிலையில் அரசாங்கம் அவர்களது எதிர்பார்ப்பை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment

Post Bottom Ad