மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி இனக்கலவரத்தினை தூண்டும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறார் - துரைரெத்தினம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 23, 2020

மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி இனக்கலவரத்தினை தூண்டும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறார் - துரைரெத்தினம்

மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி இனக்கலவரத்தினை தூண்டும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா மன்ற தலைவருமான இரா.துரைரெத்தினம் தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த ஐந்து வருடத்திற்கு மேலாக இந்த மதகுரு ஒரு வன்முறையாளராக நடந்துகொள்ளும் நிலையில் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டுகின்ற பொலிஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையென்பதை மிகவும் கவலையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டன் பின்னர் தொல்பொருள் திணைக்களத்தினால் பல வேலைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

தமிழ் பிரதேசங்களில் ஓரு ஆக்கிரமிப்பினை மேற்கொள்ளக் கூடியவாறு செயற்றிட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளனவா என்ற சந்தேகத்தின் மத்தியில் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பன்குடாவெளி பிரதான வீதியில் அமைந்துள்ள இனங்காணப்பட்ட தொல்லியல் தொடர்பான ஒரு இடத்தில் பௌத்த மதகுரு ஒருவரால் நேற்று அரச உத்தியோத்தர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தினை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வன்மையாக கண்டிக்கின்றனர்.

பன்குடாவெளி பகுதியில் தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர்கள், செங்கலடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மீதான தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இந்த மதகுருவினை பொறுத்த வரையில் கெவிழியாமடு பகுதியில் கிராம உத்தியோகத்தர் தாக்கப்பட்ட சம்பவம், பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவம், மட்டக்களப்பு கச்சேரியில் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடாத்திய சம்பவம் என சம்பவங்கள் அவரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவையெல்லாவற்றினையும் தாண்டி நேற்றையதினம் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் ஓரு மதகுரு செயற்பட்டதையெண்ணி வெட்கி தலைகுனிய வேண்டும்.

இலங்கையில் பல மதகுருக்கள் உள்ளனர். பௌத்த மதகுருக்களில் சிறந்த பல மதகுருக்கள் உள்ளனர். ஆனால் இந்த மதகுருவைப் பொறுத்தவரையில் தமிழர் பகுதிகளில் ஒரு வன்முறையினை பிரயோகிப்பதன் ஊடாக ஒரு இனக்கலவரத்தினை தூண்டும் வகையில் சிங்க மக்களுக்கு எதிராக தமிழ் மக்களை தூண்டும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்.

இந்த மதகுருவானவர் வன்மைமுறையாளனாக செயற்படுவது என்பது ஒரு வெட்கக்கேடான விடயம். பௌத்த மதத்தில் உள்ள இவ்வாறான மதகுருக்களின் மூலம் வன்முறைகளில் ஈடுபடும் செற்பாடுகளை கடந்த ஐந்து வருடமாக முன்னெடுத்துவரும் நிலையில் சட்டம் ஒழுங்கினை பாதுகாக்க வேண்டிய பொலிஸார் எந்தவித நடவடிக்கையினையும் எடுக்கவில்லையென்பது மிகவும் கவலைக்குரியதாகும்.

ஏனைய மத மதகுருக்கள் வன்முறைகளில் ஈடுபடும்போது பொலிஸார் சட்ட ரீதியான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கின்றனர். ஆனால் மட்டக்களப்பு பௌத்த விகாரையில் கடமைபுரியும் மதகுருவினைப் பொறுத்தவரையில் அரச நிர்வாகத்தில் கடமை புரியும் அதிகாரிகள் மீது இவ்வாறு தொடர்ச்சியான தாக்குதல்கள் நடாத்தி வருவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இவ்வாறான செயற்பாடுகளுக்கு இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென்பது கவலைக்குரிய விடயமாகும்.

பன்குடாவெளியில் தொல்லியல் திணைக்கள மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களை அறையில் பூட்டி வைத்து அவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டிருந்த நிலையில் அங்குவந்த பொலிஸார் எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது என்பது கண்டிக்கத்தக்க விடயமாகும்.

பொலிஸார் முன்னிலையில் தாக்குதல் நடாத்தப்பட்ட போதிலும் எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்காதது எங்களுக்கு பலத்த சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றது. பொலிஸார் இருக்கும்போதே குறித்த தேரர் இவ்வாறு நடந்துகொள்ளும் நிலையில் ஏனைய அதிகாரிகள் அச்சம் கொள்ளும் நிலையும் உள்ளது.

இந்த மதகுருவினால் தொடர்ச்சியாக அரச உத்தியோகத்தர்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறை சம்பவத்திற்கு ஜனாதிபதி அவர்கள் உரிய நடவடிக்கையெடுத்து சமூகத்தினையும் அரசாங்க உத்தியோகத்தர்களையும் பாதுகாக்கக் கூடியவாறு நடவடிக்கையெடுக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment