அயோடின் கரைசல் கொரோனா தொற்றை முழுமையாக செயலிழக்கச் செய்யும் : புதிய ஆய்வில் தெரிவிப்பு - News View

Breaking

Post Top Ad

Monday, September 21, 2020

அயோடின் கரைசல் கொரோனா தொற்றை முழுமையாக செயலிழக்கச் செய்யும் : புதிய ஆய்வில் தெரிவிப்பு

அயோடின் கரைசல் கொரோனா வைரஸ் தொற்றை முழுமையாக செயலிழக்கச் செய்யும் என புதிய ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலக நாடுகளை உலுக்கி வருகிறது. தொற்று பரவல் சில நாடுகளில் உச்சத்தில் உள்ளன. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளும் மருத்துவ பரிசோதனைகள் கட்டத்திலே இருப்பதால், தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் விழி பிதுங்கி வருகின்றன.

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.12 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2.28 கோடியாக உள்ளது. தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9.64 லட்சமாக உள்ளது.

அமெரிக்காவில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 70 லட்சத்தை கடந்துள்ளது. பிரேசிலில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 45 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86,961 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 54,87,580 ஆக உயர்ந்து உள்ளது.

இந்தியாவில் இந்த தொற்றின் பரவல் மிக அதிவேகத்தில் உள்ளது. இந்த நிலையில், நாம் பல முன்னெச்சரிக்கைகள் மற்றும் தடுப்பு முறைகளைப் புரிந்துகொண்டு மதிப்பாய்வு செய்வது மிகவும் முக்கியமாகிறது.

உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் வைரஸ் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றிய கூடுதல் தகவல்களைக் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர். இதிலிருந்து கிடைக்கும் தகவல்கள் நோய்க்கான பயனுள்ள தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளைக் கண்டறிய உதவலாம்.

கொரோனா நோயை ஏற்படுத்தும் சார்ஸ், கோவ் 2 என்ற வைரஸ் பரவுவதைத் தடுக்க அயோடின் கரைசலைப் பயன்படுத்துவது உதவும் என்று ஒரு புதிய ஆய்வு இப்போது பரிந்துரைத்துள்ளது.

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, போவிடோன் - 0.5%, 1.25% மற்றும் 2.5% என்ற அயோடினின் மூன்று வெவ்வேறு செறிவுகளுக்கு எதிராக வைரஸின் மாதிரிகளை அவர்கள் பரிசோதித்தபோது, 15 விநாடிகளுக்குள் வைரஸை முழுமையாக இவை செயலிழக்கச் செய்தது கண்டறியப்பட்டது. அதே சோதனை எத்தனால் ஆல்கஹால் மூலமும் நடத்தப்பட்டது. ஆனால் இது போன்ற நேர்மறையான முடிவை அது காட்டவில்லை.

0.5 அயோடின் செறிவு கூட சார்ஸ், கோவ்-2 வைரஸை முற்றிலுமாக செயலிழக்கச் செய்யலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கனடா பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியின் ஆராய்ச்சியாளர்களால் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

மூக்கு மற்றும் வாய் ஆகியவை ஏ.சி.இ 2 (ACE2) ஏற்பிகளை அதிக அளவில் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. இவை மனித உடலில் கொரோனா வைரஸின் நுழைவு புள்ளிகளாக செயல்படும் செல்களாகும். இதனால்தான் கொரோனா வைரஸின் விஷயத்தில் பெரும்பாலான ஆராய்ச்சிப் பணிகள் நாசி ஸ்ப்ரேக்கள், நாசி தடுப்பு மருந்துகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன.

சார்ஸ் மற்றும் மெர்ஸ் போன்ற பிற தொற்று நோய்களில் வைரஸ்களை செயலிழக்க அயோடின் கரைசல்கள் பயனுள்ளதாக இருக்கும் என்று ஒரு ஆய்வு முன்பு கண்டறிந்தது. அயோடின் கரைசலை நேரடியாக மக்கள் பயன்படுத்தலாமா என்பது குறித்து இந்த ஆராய்ச்சி எந்த பரிந்துரையையும் அளிக்கவில்லை.

அயோடின் கரைசலைப் பயன்படுத்தி வைரஸை செயலிழக்க 15 வினாடிகள் போதுமானதாக இருக்கும் என்று ஆய்வின் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கரைசல்கள், நாசி கிருமிநாசினிகளின் வடிவத்தில், நோயாளிகளுக்கு உள்ளார்ந்த நடைமுறைகளுக்கு வருவதற்கு முன்பு பயன்படுத்தப்பட்டால், அது நீர்த்துளிகள் மற்றும் ஏரோசோல்கள் மூலம் வைரஸ் பரவுவதற்கான அபாயத்தைக் குறைக்க உதவும் என்று அவர்கள் மேலும் கூறினர்.

மருத்துவமனைகள், அறைகள் மற்றும் பொதுவான பகுதிகளில் வைரஸ் பரவுவதைத் தவிர்ப்பதற்காக, மருத்துவ வல்லுநர்கள் நோயாளிகளுக்கு அவர்களின் நியமனங்களுக்கு முன்னர் இந்த கரைசலைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் மேலும் தெரிவித்தனர்.

இந்த முறை கொரோனா காரணமாக ஒருவர் கடுமையான அறிகுறிகளைப் பெறுவதற்கான அபாயத்தைக் குறைக்கக்கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் மேலும் தெரிவித்தனர். ஏனெனில் இது நுரையீரலுக்குச் செல்லும் வைரசின் அளவை வெகுவாகக் குறைக்க உதவும்.

எனினும், இதை வீட்டில் முயற்சி செய்ய வேண்டாம் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். நாசியை இந்த கரைசல்களைக் கொண்டு சுத்தம் செய்வது மருத்துவரின் மேற்பார்வையின் கீழ் மட்டுமே செய்யப்பட வேண்டும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad