நான் முன்னைய ஆட்சியில் ஐ.எஸ். குறித்து எச்சரித்தேன் - விஜயதாஸ ராஜபக்ஷ சாட்சியம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 30, 2020

நான் முன்னைய ஆட்சியில் ஐ.எஸ். குறித்து எச்சரித்தேன் - விஜயதாஸ ராஜபக்ஷ சாட்சியம்

இலங்கையர்கள் பலர் இஸ்லாமிய இராச்சியத்துடன் (ஐ.எஸ்) தொடர்புபட்டுள்ளனர் என்ற உண்மையை நான் பாராளுமன்றத்தில் தெரிவித்தேன். அப்போதைய அரசாங்கம் இந்த எச்சரிக்கை குறித்து கவனம் செலுத்தியிருந்தால் 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் அதுபோல் ஐக்கிய தேசிய கட்சியின் அழிவு மற்றும் அதிகாரம் இழப்பு ஆகியன தவிர்க்கப்பட்டிருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 21 இல் நடைபெற்ற, 2019 உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கலாநிதி ராஜபக்ஷவை குறுக்கு விசாரணை செய்ய விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து இவ்விருவரும் ஆணைக்குழுமுன் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டது.

முன்னதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் விஜயதாஸ ராஜபக்ஷ ஆஜரானபோது, பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்டவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை வழங்கியிருந்தார்.  முஜிபுர் ரஹ்மானின் பெயரும் அதில் இருந்தது. 

குறுக்கு விசாரணையின்போது கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஷவிடம் “என்ன அடிப்படையில் எனது பெயர் அப்பட்டியலில் குறிப்பிடப்பட்டது?” என முஜிபுர் ரஹ்மான் கேட்டார். அதற்கு விஜயதாஸ ராஜபக்ஷ பதிலளிக்கையில், ஒருவரின் பெயர் மட்டுமல்ல பலரது பெயர்களைக் குறிப்பிட்டேன். எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி ஆகியோரையும் குறிப்பிட்டேன் என அவர் கூறினார்.

முன்னாள் அமைச்சர் கலாநிதி ராஜித சேனாரத்ன மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் தனது 2016 நவம்பர் 18 ஆம் திகதிய அறிக்கையை மறுத்தனர். அது இலங்கையர்கள் பயங்கரவாதத்துடன் இணைந்துள்ளனர் என்பதாகும். பாராளுமன்றில் என்னால் விடுக்கப்பட்ட இந்த அறிக்கையை மறுத்ததன் மூலம் பயங்கரவாதத்தை இவர்கள் நியாயப்படுத்தினர் என்றார்.

அந்த நேரம் அரசாங்கம் எனது அறிக்கை குறித்து கவனம் செலுத்தியிருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள், ஐக்கிய தேசிய கட்சியின் அழிவு மற்றும் அதிகாரம் இழப்பு ஆகியன தவிர்க்கப்பட்டிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

தினக்குரல்

No comments:

Post a Comment