முல்லைத்தீவு நஞ்சுண்டான் குளத்தால் பாராளுமன்றில் ஏற்பட்ட குழப்பம் - News View

About Us

About Us

Breaking

Friday, September 25, 2020

முல்லைத்தீவு நஞ்சுண்டான் குளத்தால் பாராளுமன்றில் ஏற்பட்ட குழப்பம்

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்) 

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நஞ்சுசுண்டான் குளம் கமத்தொழில் அமைச்சின் கீழ் வருமா அல்லது நீர்ப்பாசன அமைச்சின் கீழ் வருமா என்பது தொடர்பில் சபையில் குழப்பநிலை ஏற்பட்டது. 

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நஞ்சுசுண்டான் குளப் புனரமைப்புக்காக கடந்த அரசினால் 40 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தபோதும், தொடர் மழை காரணமாக புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள முடியாமல் போனதால் அந்த நிதி திருப்பி அனுப்பப்பட்டுள்ளமை தொடர்பில் கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிடம் கேள்வி எழுப்பியிருந்தார். 

இக்கேள்விக்கு தமிழில் பதிலளித்த கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, உறுப்பினரே இந்தக் கேள்வி எனது அமைச்சுக்குரியதல்ல. இது நீர்ப்பாசன அமைச்சுக்குரியது. அந்த அமைச்சிடம்தான் நீங்கள் இக்கேள்வியை கேட்க வேண்டும் என்றார். 

இதனை மறுத்த சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. இல்லை, இது கமத்தொழில் அமைச்சிற்குரியது. அந்த அமைச்சுதான் இதற்கு முதலில் நிதி ஒதுக்கியது என்றார். 

இல்லை உறுப்பினரே அது எனது அமைச்சுக்குரியதல்ல என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மீண்டும் கூறினார். 

தொடர்ந்தும் சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி, இல்லை. அது உங்கள் அமைச்சுக்குரியதுதான். அங்குள்ள கமத்தொழில் திணைக்கள அதிகாரிகள் கூட நஞ்சுசுண்டான் குளம் தங்களுக்குரியது என்றுதான் கூறியுள்ளனர் என்றார். 

அதற்கு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, சரி உறுப்பினரே கடந்த அரசில் அது கமத்தொழில் அமைச்சுக்குரியதாகத்தான் இருந்தது. இப்போதைய அரசில் அது சமல் ராஜபக்சவின் நீர்ப்பாசன அமைச்சுக்குரியது என்று கூறினார். 

பின்னர், சபையில் இருந்த சமல் ராஜபக்சவிடம் ஏதோ பேசிவிட்டு, உறுப்பினரே அந்தக் குளத்துக்குரிய நிதி அடுத்த வருடம் ஒதுக்கப்பட்டு புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படுமென அமைச்சர் சமல் ராஜபக்ச கூறுகின்றார் என்றார்.

No comments:

Post a Comment