நினைவு கூரலை தடுக்க முடியாது, அடிப்படை உரிமை என்கிறார் சம்பந்தன் - News View

About Us

About Us

Breaking

Saturday, September 19, 2020

நினைவு கூரலை தடுக்க முடியாது, அடிப்படை உரிமை என்கிறார் சம்பந்தன்

(ஆர்.ராம்) 

விடுதலைக்கான பயணத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூருவது அடிப்படை உரிமையாகும். அதனை யாரும் தடுக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். 

அதேநேரம், உரிமைகள் மறுக்கப்படும் சந்தர்ப்பங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒருங்கிணைத்து பலமான செயற்பாடுகளை முன்னெடுக்கும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜாவின் செயற்பாடு பாராட்டப்பட வேண்டியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் 33ஆவது ஆண்டு நினைவு கூரலுக்கு வடக்கு கிழக்கில் நீதிமன்றங்களின் ஊடாக தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் வினவியபோது அவர் அளித்த பதிலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலைக்கான பயணத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூருவது அனைவருக்கும் உள்ள உரிமையாகும். அது அடிப்படை உரிமையும் கூட. அதனை யரும் தடுத்து நிறுத்த முடியாது. நாங்கள் பல்வேறு தருணங்களில் அவ்வாறான நினைவு கூரல்களை மேற்கொண்டு வந்திருக்கின்றோம். அதற்கு தடைகளை ஏற்படுத்த முடியாது. 

இவ்வாறான நிலையில் தற்போதைய சூழலில் அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து அந்த உரிமையை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாவை.சேனாதிராஜா முன்னெடுத்துள்ளார். 

இவ்விதமான விடயங்களில் எம்மிடையே ஒற்றுமை மிகவும் முக்கியமானது. அதனடிப்படையில் அவர் முன்னெடுத்துள்ள செயற்பாடானது பாராட்டத்தக்கதாகும். மேலும் தொடர்ச்சியாக பொதுவிடயங்களில் ஒற்றுமையாக செயற்பட வேண்டியதும் அவசியமாகின்றது என்றார்.

No comments:

Post a Comment