கோடிக் கணக்கில் செலவிட்டு, மக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு பதவிக்கு வந்தவர்கள் நாம் அல்லர் : அமைச்சர் டக்ளஸ் இறுமாப்பு - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 9, 2020

கோடிக் கணக்கில் செலவிட்டு, மக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு பதவிக்கு வந்தவர்கள் நாம் அல்லர் : அமைச்சர் டக்ளஸ் இறுமாப்பு

பெண் தலைமைத்துவக் குடும்பங்களை வெகுவாக பாதித்து வருகின்ற நுண் கடன் திட்டம் குறித்து ஒரு தீர்க்கமான முடிவுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த காலத்தில் வடக்கு மாகாண சபையைக் அபகரித்தவர்கள் எமது மக்களின் துறைசார் பொருளாதார உருவாக்கங்களை மேற்கொள்ளாமையும் குறித்த நிலை தொடர்வதற்கு காரணம் என்று சுட்டிக்காட்டினார்.

மேலும், கடந்த தேர்தலில் கோடிக்கணக்கான பணத்தை செலவிடாமலும் மக்கள் மத்தியில் உணர்வுகளை தவறாக தூண்டாமலும் கடந்த கால உழைப்பை மாத்திரமே மூலதனமாக்கி மக்கள் மனங்களை வென்றவர்கள் என்ற வகையில் அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய தார்மீகக் கடமை தமக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி வருடாந்த அறிக்கை, நிதி அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை, 2020ஆம் ஆண்டு நடுப்பகுதி அரச நிதி நிலைமை அறிக்கை தொடர்பில் நேற்றுமுன்தினம் (08.09.2020) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டில் அனைத்து துறைகளிலும் ஸ்திரமான நிலையை ஏற்படுத்துவதற்கான கடுமையான உழைப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம்.

எமது இந்த உழைப்பின் முழுமையான பயன்கள் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதிலேயே நாம் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். 

அந்த வகையில், எமது பகுதிகளில் மட்டுமின்றி, இந்த நாட்டின் கிராமப் புறங்களில் குறிப்பாக பெண்களை பெண் தலைமைத்துவக் குடும்பங்களை வெகுவாக பாதித்து வருகின்ற நுண் கடன் திட்டம் குறித்து ஒரு தீர்க்கமான முடிவுக்கு வர வேண்டியது அவசியமாகும்.

2009ஆம் ஆண்டில் யுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் வடக்கு மாகாணத்தில் வந்து குவிந்த பல்பொருள் லீசிங் நிறுவனங்களால் எமது மக்களது பொருளாதார வலுவானது தென்பகுதி நோக்கி இடப்பெயர்வை அடைந்த போதிலும் மீள் பொருளாதார வலுவை ஏற்படுத்திக் கொள்ளும் அளவுக்கு அங்கே துறைசார் ஏற்பாடுகள் இல்லாத காரணத்தால், இந்த நுண் கடன் திட்டத்திற்குள் மக்கள் இலகுவாகவே சிக்கிக் கொள்ள நேரிட்டுள்ளது.

எமது மக்களின் பொருளாதார வலுவினை ஏற்படுத்தக்கூடிய துறைசார் உருவாக்கங்களை அன்று வடக்கு மாகாண சபையினை அபகரித்துக் கொண்டவர்களால் நிச்சயமாக மேற்கொண்டிருக்க முடியும். ஆனால், அதனை அவர்கள் செய்யத் தவறியிருந்தார்கள்.

ஆக, இன்று இந்த நுண்கடனாகளில் நூற்றுக்கு 7 முதல் 15 வீதமானவர்கள் மட்டுமே உழைப்பாளர்களாக இருக்கின்ற நிலையில், பெற்ற கடனை திருப்பிச் செலுத்த இயலாமல் கிட்டத்தட்ட நூற்றுக் கணக்கில் தற்கொலைகள் இடம்பெற்றுள்ளன. அதற்கு மேலாக விவாகரத்துக்கள் இடம்பெற்றுள்ளன. குடும்பங்களைப் பிரிந்து பலர் வாழ்கிறார்கள்.

நுண் கடன் பெற்று பாதிப்புகளுக்கு உட்பட்டோருக்கு மீண்டும் கடன் தொகைகளை வழங்கி அவர்களை மேலும் மேலும் பாதிப்புகளுக்கு உட்படுத்தாமல் இந்தப் பாதிப்புகளிலிருந்து அவர்களை முழுமையாக மீட்டெடுப்பதற்கும், அதன் பின்னர் அவர்களது சுய பொருளாதார பலத்தை மேம்பாட்டுக்கு கொண்டு வருவதற்குமான ஒரு பொறிமுறை அவசியமாகும் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

எமது பகுதிகளில் வளங்கள் இல்லாமல் இல்லை. கடற்றொழில், விவசாயம், கைத்தொழில்கள் போன்றவை சார்ந்து அதிகூடிய வளங்கள் பயன்பாட்டுக்கு காத்திருக்கின்றன. அந்த வளங்களைப் பயன்படுத்துவதற்கான திட்டங்கள் எம்மிடம் இருக்கின்றன. எமது மக்களிடம் இருக்கின்றன. 

எனவே, மக்களின் வாழ்வாதாரங்களோடு இணைந்த வங்கிக் கடன் திட்டங்களைக் கொண்டு வருகின்றபோது, அவற்றை எமது மக்களும் பயன்பெறுகின்ற வகையிலான ஏற்பாடுகள் அவசியமாகும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad