இரண்டு தசாப்தங்களை கடந்த விதையிட்டவனின் மறைவும், விதைகளின் நிலையும் - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 15, 2020

இரண்டு தசாப்தங்களை கடந்த விதையிட்டவனின் மறைவும், விதைகளின் நிலையும்

ஏ.எம்.எம். பர்ஹான்

கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் கல்வி, கலாச்சாரம் , பொருளாதாரம் என்வவற்றில் தனக்கான ஒரு அடையாளத்தை கொண்டிருக்கும் சம்மாந்துறை மண்ணில் தாய் நாட்டு சுதந்திர ஆண்டின்(1948) அக்டோபர் 23ம் திகதி உசைன் விதாணையார் மற்றும் மதீனா உம்மாவிற்கு மகனாகவும் மூன்று சகோதரிகளுக்கு சகோதரனாகவும் பிறந்தார் இலங்கை முஸ்லிம் அரசியல் வரலாற்றின் கதாநாயகன் மறைந்த மாபெரும் தலைவர் எம். எச். எம் அஷ்ரப் அவர்கள். கல்முனைக்குடி அல் அஸ்கர் வித்தியாலயத்தில் தனது ஆரம்பக்கல்வியை தொடர்ந்த இவர் கல்முனை வெஸ்லி மற்றும் பாத்திமா கல்லூரியில் இடைநிலை கல்வியையும் கற்றார்.

முஸ்லிம்களின் அரசியல் தலைமையாக செயற்பட்டு வந்த இவர் சட்டத்தரணி, எழுத்தாளர், கவிஞர் என பல திறமைகளை தன்னகத்தே கொண்டிருந்தார். "அதுமட்டுமல்லாது நான் எனும் நீ" எனும் யாவரும் அறிந்த நூலின் உரிமையாளரும் இவரே. காதல் திருமணத்தின் மூலம் பேரியல் அவர்களை கரம்பிடித்த இவருக்கு அமான் அஷ்ரப் எனும் மகன் பிறந்தார்.

இளவயது முதல் முஸ்லீம் சமூகம் மீது கொண்டிருந்த தூர நோக்கு சிந்தனையின் வெளிப்பாடாகவும் முஸ்லிம்களின் குரல் அரசியல் ரீதியிலும் ஒலிக்க வேண்டும் என்பதற்காகவும் தனது வாழ்க்கையில் அதிக காலத்தை மரணம் வரை அரசியல் களத்திலேயே செலவிட்டார். இதன் வெளிப்பாடாகவும் அன்றைய காலகட்டத்தில் முஸ்லிம்களுக்கான தேவையாகவும் இருந்த ஒரு அரசியல் தனித்துவத்தை வெளிப்படுத்த கூடிய முஸ்லீம் கட்சியை தனது சிறந்த வியூகத்தின் மூலம் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் அடையாளமாக "ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஷ்" எனும் விரூட்சத்தை(அரசியல் கட்சி) ஆரம்பித்து வைத்தார். இன்று வரை முஸ்லிம்களின் தாய்க்கட்சியாக பேசப்படும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகரான மறைந்த தலைவர் எம். எச். எம் அஷ்ரப் அவர்கள் தனது மரணம் வரை கட்சியின் உறுப்பினர்களின் ஆதரவுடன் தலைமைத்துவத்தில் இருந்து வந்தார். 1989ல் பாராளுமன்றம் நுழைந்த அவர் ஒரு தசாப்த பாருமன்ற அரசியல் வாழ்க்கையை கொண்டிருந்த அவர் கப்பல் துறைமுக அபிவிருத்தி அமைச்சர், துறைமுக அமைச்சு போன்ற தனக்கு கிடைக்கப்பெற்ற அமைச்சு பொறுப்பை திறன்பட செயற்படுத்தியவர் என்பது யாவரும் அறிந்ததே.

இன்று வளர்ச்சி கண்டு நிற்கும் ஒலுவில் துறைமுகம் மற்றும் பல பட்டதாரிகளையும் கல்விமான்களையும் உருவாக்கி கொண்டிருக்கும் தென்கிழக்கு பல்கலைக்கழகம் என்பவற்றின் உருவாக்கத்திற்கு விதையிட்டவர் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களே. அபிவிருத்தியின் மூலமாகவும் இனங்களுக்கிடையிலான இடைத்தொடர்பு பாலமாகவும் செயற்பட்ட அவர் அன்றைய காலத்தில் பெரும்பான்மை மக்களாலும் மதிக்கப்பட்ட சிறுபான்மை அரசியல் தலைவர் என்றால் அது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

வடகிழக்கு இணைப்பு தொடர்பாக "வடகிழக்கு இணைக்கப்பட்டால் கிழக்கில் முஸ்லிம்களுக்கான தனி மாகாணசபை உருவாக்கப்பட வேண்டும்" என்ற தெளிவான கருத்தை கொண்டிருந்தார் அஷ்ரப் அவர்கள். அதுமட்டுமல்லாது நாடாளுமன்றில் மூன்றாவது சக்தியாகவும், 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் பேரம் பேசும் அரசியல் சக்தியாக மாற வேண்டும் என்ற முனைப்பில் செயற்பட்டார்.பல எதிர்கால திட்டமிடல்களையும் வியூகங்கையும் செயற்படுத்திய நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக 2000ம் ஆண்டு செப்டம்பர் 16 இல் உலங்கு வானூர்தி மூலம் பயணித்திருந்த நிலையில் அரநாயக்கா எனுமிடத்தில் ஏற்பட்ட விபத்தில் முஸ்லிம்களுக்காக ஒலித்த ஒரு உரிமைக்குறல் ஓய்வுக்கு வந்தது. இன்று வரை அவரது மரணம் மர்மமாக இருந்தாலும் அவரது சேவைகளும் அவரது ஆளுமையும் மக்கள் மனதில் நீங்கா இடத்திலேயே உள்ளது.

அவரது மறைவின் பின்னர் கட்சியில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக பல்வேறு முஸ்லீம் கட்சிகள் தோற்றம் பெற்றதுடன் எந்த ஒரு முஸ்லீம் கட்சியினாலும் இன்று வரை மறைந்த தலைவர் எம்.எச். எம் அஷ்ரப் அவர்களின் 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற கனவை எட்ட முடியாத நிலையிலேயே பயணிக்கின்றனர். "விதைத்தவன் உறங்களாம் ஆனால் விதைகள் உறங்குவதில்லை" என்ற நிலையில் நோக்கினால் இரண்டு தசாப்தங்களை கடந்த விதைத்தவனின் உறங்களின் பின்னர் விதைகளின் துளிர் மட்டுமே இன்று வரை காணக்கூடியதாக உள்ளது. 

எதிர்காலங்களிலாவது முஸ்லீம் அரசியல்வாதிகள் தங்களது தனிப்பட்ட விருப்புவெறுப்புக்கு அப்பால் ஒரே கட்சியில் இணைந்து செயற்படுவது முஸ்லீம் மக்களின் அவா மட்டுமல்லாது காலத்தின் தேவையாகவும் உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad