பாராளுமன்ற தேர்தலை கலப்பு தேர்தல் முறையில் ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் திட்டமாகும் - அமைச்சர் தினேஷ் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 24, 2020

பாராளுமன்ற தேர்தலை கலப்பு தேர்தல் முறையில் ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் திட்டமாகும் - அமைச்சர் தினேஷ்

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்) 

பாராளுமன்ற தேர்தலை கலப்பு தேர்தல் முறையில் ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் திட்டமாகும். அதன் மூலமே மக்கள் பிரதிநிதிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் தொடர்புகள் அதிகரிக்கும். இதனை மேற்கொள்வதற்கு அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை தேர்தல் ஆணைக்குழுவின் செயற்திட்ட அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், தேர்தல் ஆணைக்குழு கொவிட்-19 அச்சுறுத்தலான காலப்பகுதியில் மிகவும் சவால்களுக்கு மத்தியில் பொதுத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தியமைக்கு நன்றிகளை தெரிவிக்கின்றேன். 

அதேபோன்று தேர்தல் ஆணைக்குழுவின் ஒரு உறுப்பினர் தனித்து சுயாதீனமாக செயற்பட்டமை, அந்த ஆணைக்குழுவின் கெளரவத்தை பாதுகாக்கும் வழியல்ல. அதனால் பாரிய விமர்சனத்துக்கும் தேர்தல் ஆணைக்குழு ஆளாகியும் இருக்கின்றது. 

மேலும் தேர்தல் ஒன்றில் நிதி செலவழிப்பது தொடர்பிலான வழிகாட்டலில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இது தொடர்பில் எந்த தீர்மானத்தையும் எடுக்க முடியாமல் போயுள்ளது. அண்மைக்கால தேர்தல்களின் போது கோடிக்காணக்கான பணம் செலவழிக்கப்பட்டிருக்கின்றது. சர்வஜன வாக்குரிமைக்கும் அது ஒரு வகையில் சவாலை ஏற்படுத்தி இருக்கின்றது. இதனை கட்டுப்படுத்த தேர்தல் ஆணைக்குழுவுக்கு இதுவரை முடியாமல் பாேயிருக்கின்றது. 

அத்துடன் பங்களாதேஷ், இந்தியா போன்ற நாடுகளில் நடைமுறையில் இருக்கும் இலத்திரனியல் முறையில் வாக்களிக்கும் முறையை ஏற்படுத்த வேண்டும். அதேபோன்று வாக்கு எண்ணும்போதும் பிரதேச மட்டத்தில் வாக்குகளை எண்ணி, பெறுபேற்றை அறிவிக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும். 

எனவே உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அமுல்படுத்தியுள்ள விகிதாசார மற்றும் தொகுதி அடிப்படையிலான கலப்பு தேர்தல் முறையை பாராளுமன்ற தேர்தலிலும் ஏற்படுத்துவதே எமது திட்டமாகும். அதன் மூலமே பொதுமக்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் இருக்கும் தொடர்புகள் அதிகரிக்கும். அதனால் இந்த தேர்தல் முறையை பாராளுமன்ற தேர்தலில் ஏற்படுத்திக் கொள்ள இணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment