எமது உரிமையை அரசாங்கம் அடக்குமுறைகளினால் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றது - பாராளுமன்றில் கஜேந்திரன் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 23, 2020

எமது உரிமையை அரசாங்கம் அடக்குமுறைகளினால் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றது - பாராளுமன்றில் கஜேந்திரன்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 

தியாக தீபம் திலீபனை நினைவுகூர எங்களுக்கு சகல உரிமையும் உள்ளது. எமது உரிமையை அரசாங்கம் அடக்குமுறைகளினால் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரான செல்வராசா கஜேந்திரன் சபையில் தெரிவித்தார். 

எங்களின் உரிமைகளை வெற்றி கொள்ளும் போராட்டத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூருவதற்கான உரிமையை வென்றெடுப்பதற்காக உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் தொடர்ந்தும் போராடுவோம் என்றும் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் நேற்று விசேட வியாபார பண்ட அறவீட்டு சட்டத்தின் மீதான 31 சட்டங்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவர் இவ்வாறு தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், உங்களின் தேசத்தின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைப்பதற்காக நீங்களே 20 ஆவது திருத்தத்தை சமர்ப்பித்துள்ள நிலையில், தமிழர் தேசத்தை பொறுத்த வரையில் மிகவும் முக்கியமான நாளாகும். 

எங்களுடைய தேசத்தினதும் உங்களது தேசத்தினதும் ஜனநாயக உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதற்கும், எமது தமிழ் தேசியத்தின் அங்கீகாரத்திற்காகவும் ஜனநாயக வழியில் வன்முறையின்றி உண்ணா நோன்பிருந்து உயிர்த் தியாகம் செய்த மாவீரன் திலிபனின் 8 ஆம் நாள் நினைவேந்தலை இதயத்தில் நிலைநிறுத்திக் கொள்கிறேன். 

20 ஆவது திருத்தச் சட்டம் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயற்பாடு என்று கூறி எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டமும் போராட்டமும் செய்கின்றனர். இதனை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் இந்த இடத்தில் ஒரு விடயத்தை கூற வேண்டும். 

அரசியலமைப்பின் 10 ஆம் 14 ஆம் சரத்துக்களுக்கமை இருக்கும் எங்களின் உரிமைகளுக்காக உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் உரிமைகளை இந்த அரசாங்கம் மறுத்துள்ள நிலையில் அதனை ஆமோதிக்கும் வகையில் எதிர்க்கட்சியினர் ஜனநாயகத்திற்கு எதிராக குரல் கொடுப்பதாக கூறிக்கொண்டிருக்கின்றனர். 

20 ஆவது திருத்தத்திற்கு எதிராகவே நாங்களும் இருக்கின்றோம். அது நீக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் கருத்தும். ஆனால் இந்த நேரத்தில் எதிர்க்கட்சியினர் ஒரு விடயத்தை புரிந்துகொள்ள வேண்டும். 

நீங்கள் ஒருபுறம் இந்த தீவில் உங்களின் சகோதர தேசத்தின் உரிமைகளை முற்றாக மறுத்துக் கொண்டு உங்களுடைய ஜனநாயக உரிமைகளை நிலைநிறுத்த முடியுமென்று நினைக்க முடியாது. 

கடந்த 70 வருடங்களாக உங்களால் ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியாமைக்கு உங்களின் மனநிலையே காரணமாகும். 18 ஆம் திருத்தத்தின் ஊடாகவோ, 19 ஆவது திருத்தம் ஊடாகவோ அது பாதுகாக்கப்படவில்லை. 20 ஆவது திருத்தத்தின் மூலமும் அதனை பாதுகாக்க முடியாது. 

ஏனென்றால் இந்த தீவில் தமிழரின் உரிமைகளை நசுக்கிக் கொண்டு ஒருபோதும் இந்த நாட்டில் ஒரு ஜனநாயக சூழலை உருவாக்கிவிட முடியாது என்பதனையும் இந்த இடத்தில் பதிவு செய்கின்றேன். 

வடக்கில் கிழக்கில் எங்களின் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர முடியாது என்று நீதிமன்றத்தினால் கட்டளையிடப்பட்டுள்ளது. அதேபோன்று வவுனியா நெடுங்கேணியில் வெடுக்குநாறி ஆலயத்தில் திரு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட போதும் காவல் துறையினர் அதனை குழப்பிக் கொண்டுள்ளனர். நீதிமன்றத்தினால் அதனை நடத்த முடியும் என்று கூறியுள்ள போதும் பொலிஸார் இடையூறு செய்கின்றனர். 

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது கட்சியை சேர்ந்த குணராசா பொலிஸாரினால் அச்சுறுத்தப்பட்டுள்ளார். திலீபனுக்கு நினைவேந்தல் செய்தால் உனக்கு நினைவேந்தல் செய்ய யாரும் இருக்க மாட்டார்கள் என்று அச்சுறுத்தியுள்ளனர். இப்படியான நெருக்கடி நிலையிலேயே நாங்கள் இருக்கின்றோம். 

எங்களின் உரிமைகளுக்காக உயிர் நீத்தவர்களை நினைவு கூருவதற்காக உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் நாங்கள் தொடர்ந்தும் போராடுவோம். இதேவேளை அம்பிட்டிய சுமனரட்ன தேரர் மட்டக்களப்பில் அரச ஊழியரை தாக்கி அடாவடியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார். அவர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment