அஞ்சலி செலுத்துவதற்கான உரிமை மறுக்கப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமை - விக்னேஸ்வரன் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 24, 2020

அஞ்சலி செலுத்துவதற்கான உரிமை மறுக்கப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமை - விக்னேஸ்வரன்

எமது மக்களின் உரிமைகளுக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான உரிமை மறுக்கப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமையாகும் என பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

சென்ற அரசாங்கம் இவ்வாறான அஞ்சலிகளைக் கண்டும் காணாதது போல் இருந்ததால்தான் இம்முறை மத்தியில் இருக்கும் ஒரு தேசியக் கட்சிக்கு மக்களின் வாக்குகள் கிடைத்தன. அடுத்த முறை மத்திய தேசியக் கட்சிகளை மக்கள் வெறுத்தொதுக்குவதற்காகத்தான் இவ்வாறு இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றதோ நான் அறியேன். அடுத்த முறை கையூட்டுகள் இரட்டிப்பாகக் கிடைத்தாலும் மக்கள் மத்திய தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.

எமது மக்களின் நியாயமான உரிமைகளை வலியுறுத்தியே தியாகி திலீபன் 30 ஆண்டுகளுக்கு முன்னர் உண்ணாவிரதம் இருந்தார். உண்ணாவிரதம் இருந்து மடிந்த ஒருவரைக் கூட நினைத்து அஞ்சலி செலுத்தக் கூடாது என்று அரசாங்கம் தடை விதித்திருக்கின்றது என்றால் ஆயுதமேந்தி மடிந்தவர்களை நினைத்து அஞ்சலி செலுத்தலாம் என்று நினைக்கின்றதா? 

இரண்டுமே வேண்டாமென்றால் அரசாங்கம் கூறவருவது எதனை? அஹிம்சை முறையிலேயோ ஹிம்சை முறையிலேயோ தமிழ் மக்கள் அரசியல் நடவடிக்கைகளில் இறங்கக் கூடாது என்பதைத் தானே? மக்கள் தமது நியாயமான உரிமைகளைப் பெற எத்தனிக்கக் கூடாது என்பதை தானே அரசாங்கம் சொல்ல வருகின்றது? 

இப்பொழுதே இப்படி என்றால் 20வது திருத்தச் சட்டம் நிறைவேறினால் என்ன நடக்கப் போகின்றது என்பதை இலங்கை மக்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அடுத்து திலீபனின் அன்றைய நியாயமான கோரிக்கைகள் இன்று வரையில் நிறைவேற்றப்படவில்லை என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். 

வடக்குக் கிழக்கில் திட்டமிட்ட அரச குடியேற்றங்கள் இன்றும் நடைபெற்று வருகின்றன. தமிழ் அரசியற் கைதிகளுக்கு இன்றும் விமோசனம் கிடைக்காதிருக்கின்றது. பயங்கரவாதத் தடைச் சட்டம் இன்னமும் நடைமுறையில் உள்ளது. தமிழர் பிரதேசங்களில் புதிய பொலிஸ் நிலையங்களைத் திறந்து அங்கு தமிழ் பேசாதவர்களைப் பதவியில் இருத்துவது இன்றும் நடந்து கொண்டிருக்கின்றது.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

No comments:

Post a Comment