கோத்தபாய, மஹிந்த ஆட்சியில் மக்கள் எதிர்மறையான மாற்றங்களை எதிர்பார்க்கின்றார்கள் : அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி - News View

About Us

About Us

Breaking

Friday, September 11, 2020

கோத்தபாய, மஹிந்த ஆட்சியில் மக்கள் எதிர்மறையான மாற்றங்களை எதிர்பார்க்கின்றார்கள் : அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி

(நா.தனுஜா) 

அண்மைக்காலமாக நெருக்கடியை எதிர்கொண்டுவந்த நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கான சிறந்த வாய்ப்பை நாம் நடைபெற்று முடிந்த தேர்தல்களின் ஊடாகப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடனான மிகவும் வலுவான தலைமைத்துவம் நாட்டிற்குக் கிடைத்திருக்கிறது. இராணுவ சேவையில் ஈடுபட்ட கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதியாகவும் அரசியல் அனுபவமுடைய மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராகவும் கொண்ட அரசாங்கத்தின் ஆட்சியில் மக்கள் எதிர்மறையான மாற்றங்களை எதிர்பார்க்கின்றார்கள் என்று பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்தார். 

இலங்கை நிர்வாக சேவை அமைப்பின் 2020 ஆம் ஆண்டுக்கான வருடாந்தக் கூட்டம் இன்று பத்தரமுல்லையில் உள்ள வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது நாட்டை முன்நிறுத்தி மேற்கொள்ளும் விடயங்களில் ஒரு தெளிவு இருந்தால் மாத்திரமே நாம் முன்னேற்றப் பாதையில் செல்ல முடியும். அதற்கு நாம் வரலாற்றைப் புரட்டிப்பார்க்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அதனூடாகவே எமது கடந்த கால தவறுகளைத் திருத்திக் கொண்டு சரியான பாதையில் செல்ல முடியும். 

வரலாற்றில் வெவ்வேறு காலப்பகுதிகளிலும் பல்வேறு மாற்றங்களைக் கடந்து வந்திருக்கின்றோம். இன மோதல்கள், மூன்று தசாப்த காலப்போர், சுனாமி போன்ற பல்வேறு விதமான சவால்களினால் ஏற்பட்ட பாதிப்புக்களிலிருந்து எமது நாடு மீண்டிருப்பதுடன் ஒவ்வொரு ஆட்சி மாற்றங்களின் போது வெவ்வேறு மாறுபாடான நிலைமைகளை எதிர்கொண்டிருக்கிறோம். 

ஆனால் இவ்வாறான அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாம் நாட்டைக் கொண்டு செல்ல வேண்டிய இடத்திற்குக் கொண்டு சென்று சேர்த்திருக்கிறோமா என்பது கேள்விக்குறியான விடயமே. அண்மைக் காலமாக நாடு மிகவும் குறைவான பொருளாதார வளர்ச்சியையே பதிவு செய்திருக்கிறது. அதற்கு கொரோனா வைரஸ் பரவல் உள்ளடங்கலாக பல்வேறு விடயங்கள் தூண்டல் காரணங்களாக அமைந்தன. 

ஆனால் அதேவேளை 2020 ஆம் ஆண்டில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான சிறந்த வாய்ப்பை நாம் மீண்டும் பெற்றுக் கொண்டிருக்கிறோம். நாட்டிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடனான மிகவும் வலுவான தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது. இராணுவ சேவையில் ஈடுபட்ட கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதியாகவும் அரசியல் அனுபவமுடைய மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராகவும் கொண்ட அரசாங்கம் அமைந்திருக்கின்றது. 

இந்த ஆட்சியில் மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றார்கள். போதைப் பொருள் பாவனையை முற்றாக இல்லாதொழித்து, எமது நாட்டிற்குரிய கலாசாரம் மற்றும் பாரம்பரியங்கள் என்பவற்றைப் பாதுகாத்துக் கொண்டு முன்நோக்கிப் பயணிப்பதற்கான நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று தற்போது எம்மிடம் பெருமளவிலான அந்நியச் செலாவணி இல்லாத நிலையில் உள்நாட்டு இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 

பசில் ராஜபக்ஷவின் யோசனைக்கு அமைவான உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிக்கக் கூடிய வகையில் ஐந்து கேந்திர நிலையங்களை உருவாக்குவதற்கான திட்டமொன்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்தை மையப்படுத்தி உள்நாட்டிலேயே மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான திட்டமொன்றும் காணப்படுகின்றது. எனவே கடந்த காலங்களில் நாம் இழைத்த தவறுகளை ஆராய்ந்து, அவற்றைத் திருத்திக் கொண்டு வளமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கவேண்டும் என்றார்.

No comments:

Post a Comment