
(செ.தேன்மொழி)
19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காகவே 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவருவதாக அரசாங்கம் தெரிவித்தாலும், அந்த திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் சிக்கலான விடயங்கள் தொடர்பில் தற்போது நாட்டிலுள்ள அனைவரும் அவதானம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். எனவே இதனை அரசாங்கம் மீளாய்வு செய்வதே சிறந்தது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் காரணமாகவே பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், அதனாலேயே 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவரப் போவதாகவும் அரசாங்கம் காண்பித்து வருகின்றது.
இதனை நிவர்த்தி செய்வதற்கு கணக்காய்வு ஆணைக்குழுவையும், தேசிய கொள்முதல் ஆணைக்குழுவையும் நீக்க வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர். தேசிய கொள்முதல் ஆணைக்குழு அதன் செயற்பாடுகளை உரிய முறையில் செய்ததா? என்ற கேள்வி காணப்பட்டாலும். அதற்கு அவர்களுக்கு உரிய சர்தர்ப்பம் கிடைக்கவில்லை.
ஆணைக்குழு நியமிக்கப்பட்ட போதும் அதனை வர்த்தமானி படுத்தல் மற்றும் அந்த ஆணைக்குழுவினால் செய்ய வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தப்படவில்லை. அதனால் அதனை சிக்கலானது என்று குறிப்பிட முடியாது.
இந்த தேசிய கொள்முதல் ஆணைக்குழுவினால் அமைச்சர்கள் அவர்களது அமைச்சுக்களின் ஊடாக முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு எவ்வாறான முறையில் நிதி ஒதுக்கீடுகளை செய்கின்றார்கள் என்பது தொடர்பில் மக்கள் கேள்வி எழுப்ப முடியும். இந்த ஆணைக்குழு நீக்கப்பட்டால் அந்த வாய்ப்பு இல்லாமல் போகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment