இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் சாகசங்கள் பல நிகழ்த்திவிட்டு சத்தமில்லாமல் உறங்கிக் கொண்டிருக்கும் ஓர் ஆத்மா மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 16, 2020

இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் சாகசங்கள் பல நிகழ்த்திவிட்டு சத்தமில்லாமல் உறங்கிக் கொண்டிருக்கும் ஓர் ஆத்மா மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப்

(றிபான் இஸ்மாயில் - ஓட்டமாவடி)

வரலாறு எல்லாவற்றையும் பதிவு செய்வது இல்லை அதேபோல் எல்லோரையும் பதிவு செய்வதுமில்லை வரலாற்றை உருவாக்கியவர்களையே வரலாறு பதிவு செய்கிறது அந்தவகையில் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றை மாற்றிய ஒரு சரித்திர தலைவன் மறைந்து இன்றுடன் 20 ஆண்டுகள் கடந்தாலும் இன்றும் அவர் ஒரு தேசியத் தலைவராக மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டே உள்ளார்.

1980களிற்கு முன்னர் பேரினவாத அரசியல் கட்சிகளை நம்பியிருந்த இலங்கைவாழ் முஸ்லிம்களின் தனித்துவத்தை பேணுவதற்காக உருவாக்ககப்ட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்கள் இன்று இவ்வுலகினை விட்டு பிரிந்த தினமாகும் இலங்கை வாழ் முஸ்லிம்களை பொறுத்தவரையில் செப்டம்பர் 16 ஆம் நாள் மறக்க முடியாத தினமாகும்.

இலங்கையின் அரசியல் வரலாற்றை ஆராய முற்படும் போது அல்லது முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றை ஆராய முற்படும் போது நிச்சயமாக அஷ்ரபின் வரலாறு ஒரு தெளிவான வரலாறாக காணப்படுகின்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியின் வளர்ச்சி ஒட்டு மொத்த இலங்கை முஸ்லிம்களின் எழுச்சியாகத்தான் பார்க்க படுகின்றது சரணாகதி அரசியலுக்கு பதிலாக பேரம் பேசும் அரசியல் பலத்தை முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு பெற்று கொடுத்தது இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் வேறு எந்த முஸ்லிம் வாதிகளும் செய்ய தயங்கிய விடையங்களை அஷ்ரப் துணிவுடன் நடத்தி முஸ்லிம் மக்களின் மதிப்பையும் அங்கீகாரத்தையும் பெற்ற ஒரு முஸ்லிம் தலைவன் என்ற அந்தஸ்தைப் எம்.எச்.எம்.அஷ்ரப் பெற்றுக்கொண்டார்.

எம்.எச்.எம்.அஷ்ரப்பின் பாராளுமன்ற அரசியல் வாழ்க்கையென்பது வெறும் 10 வருடங்கள்தான் 1989 இல் பாராளுமன்ற உறுப்பினரானவர் 2000ஆம் ஆண்டு வபாத்தானார். இந்த காலப்பகுதியில் இலங்கை முஸ்லிம்கள் அனைவரையும் ஒன்று படுத்தி ஒரு பலமான சக்தியாக ஒன்று திரட்டினார் ஒரு இஸ்லாமிய அரசியல் இயக்கம் செய்யவேண்டியதை ஒரு முஸ்லிம் அரசியல் வாதியாக மட்டும் இருந்து சாதித்தார் முஸ்லிம்கள் தனித்துவமான ஒரு சமூகம் என்பதை அங்கீகாரம் பெறச் செய்தார்.

இலங்கையின் அரசியலில் சேவையின் சிகரமாக திகழ்ந்தார். இன, மத, பிரதேச வேறுபாடுகளின்றி இலங்கையர் என்ற அடிப்படையில் பொதுஜன ஐக்கிய முன்னணியினால் கிடைக்கப்பெற்ற சிறந்த அமைச்சு பதவியினூடாக சேவைகளை செய்தார். ஏழைகளின் இல்லங்களை நோக்கிச் சென்ற அஷ்ரப் அவர்களின் தேவைகளை பல வழிகளிலும் பூர்தி செய்தார்.

இலங்கைவாழ் முஸ்லிம்களின் கல்வி நிலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் வகையில் 23.10.1995 தனது முழு முயற்சியினால் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினை உருவாக்கினார். இது போன்றே அண்மையில் திறக்கபப்ட்ட ஒலுவில் துறைமுகம் என்பதும் அவரது கனவாக இருந்தது.

தமிழ் முஸ்லிம் மக்களின் உறவு தொடர்பில் மிகவும் உன்னிப்பாக செயற்பட்டவர். அண்ணன் அமிர்தலிங்கம் ஈழம் பெற்றுத் தராவிட்டால் தம்பி அஷ்ரப் பெற்றுத் தருவார் என்று கூறியிருந்தமை அக்காலத்தின் தேவையாக காணப்பட்டது. அதுபோன்றே தமிழ் இயக்கங்களை அனுசரிக்காத எந்தவொரு தீர்வும் தீர்வாகாது எனக் கூறியிருந்தமை அவர் ஒரு சமாதான பிரியர் என்பதை சுட்டுகிறது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு இனவாத கட்சி என பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் கருத்துக்கள் தெரிவித்தனால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் இருந்தே தேசிய ஐக்கிய முன்னணி எனும் கட்சியை ஆரம்பித்தார் அது மட்டுமன்றி சிங்கள இனத்தவரான அசித்த பெரேரா என்பவருக்கு நாடாளுமன்ற ஆசனத்தை வழங்கி தான் ஒரு இனவாதியல்ல என்பதை நிரூபித்தும் காட்டினார்..

அஷ்ரப் சிறந்ததொரு மனிதராக அனைத்து விடயங்களிலும் விளங்கி புரட்சியை ஏற்படுத்தியுள்ளர். இலங்கை முஸ்லிம்களின் அரசியலில் வரலாற்றை கற்பதற்கு அஷ்ரபின் வரலாறு காலத்தின் தேவையாகும்.

யா அல்லாஹ் அன்னாருக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவர்க்கத்தை வழங்குவாயாக!

No comments:

Post a Comment