தேர்தலில் ஜோ பைடன் வென்றால் அது சீனாவுக்கு கிடைத்த வெற்றியாகும் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விமர்சனம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 23, 2020

தேர்தலில் ஜோ பைடன் வென்றால் அது சீனாவுக்கு கிடைத்த வெற்றியாகும் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விமர்சனம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வென்றால், அது சீனாவுக்கு கிடைத்த வெற்றியாகும் என டிரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.

அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் 3ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் 2வது முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் களமிறக்கப்பட்டுள்ளார். அத்துடன் ஜனநாயகக் கட்சியின் சார்பில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அமெரிக்காவில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

குடியரசு கட்சி வேட்பாளர் ஜனாதிபதி டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனும் ஒவ்வொரு மாகாணமாக சென்று சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருவரும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்து பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஓகியோ மாகாணத்தில் பிரசாரம் மேற்கொண்ட ஜனாதிபதி டிரம்ப், நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றால் அது சீனாவுக்கு கிடைத்த வெற்றியாக அமையும் என விமர்சித்தார். 

இதுகுறித்து அவர் கூறியதாவது நவம்பர் 3ம் திகதி அமெரிக்கர்கள் நமது தேசத்தை செழிப்பின் புதிய உயரங்களுக்கு உயர்த்துவதா அல்லது ஜோ பைடனிடம் ஆட்சியை ஒப்படைத்து நமது பொருளாதாரத்தை மூழ்கடிப்பதா என்பதை தீர்மானிப்பார்கள்.

எளிமையாக சொல்ல வேண்டுமானால் ஜோ பைடன் வெற்றி பெற்றால், அது சீனா வெற்றி பெற்றதாகும். நாம் வென்றால் ஓகியோ வெற்றி பெறுகிறது. அனைத்து நேர்மையிலும் அமெரிக்கா வெற்றி பெறுகிறது. அமெரிக்காவை முதலிடத்தில் வைக்கும் ஜனாதிபதியை நீங்கள் பெறுவீர்கள். நான் அமெரிக்காவை முதலிடத்தில் வைப்பேன்.

ஜோ பைடன் தனது 47 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் அமெரிக்க பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கும் வகையில் செயல்பட்டுள்ளார். அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பை சீனா மற்றும் பிற நாடுகளுக்கு அவர் தாரைவார்த்துள்ளார். அமெரிக்க தொழிலாளர்களுடன் கை குலுக்கிவிட்டு அவர்களின் முதுகில் குத்தி உள்ளார்.

தனது 47 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் அமெரிக்காவுக்கு எதிராக சீனா மேற்கொண்ட எந்த நடவடிக்கைகளையும் அவர் தட்டி கேட்கவில்லை. தடுக்கவும் முயற்சிக்கவில்லை. அமெரிக்க வர்த்தக உடன்படிக்கை மற்றும் உலக வர்த்தக அமைப்பில் சீனா நுழைய அவர் காரணமாக இருந்தார். இது அமெரிக்க பொருளாதாரத்தில் பல பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தியது. ஜோ பைடன் வெற்றி பெற்றால் சீனா நமது நகரங்களை அழிக்கவும் தொழிற்சாலைகளை நசுக்கவும் அவர் அனுமதி அளிப்பார் இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் விஸ்கான்சின் மாகாணத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் ஜோ பைடன் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் விவகாரத்தில் ஜனாதிபதி டிரம்ப் சிறந்த தலைமை பண்புடன் செயல்பட தவறிவிட்டதாக குற்றம் சாட்டினார்.

இது பற்றி அவர் கூறுகையில், “டிரம்ப் தனது வாழ்நாள் முழுவதும் எதிர்கொண்ட எந்த ஒரு பிரச்சினையிலும் முழுமையான வெற்றி கண்டதில்லை. கொரோனா நெருக்கடியை சமாளிக்க சிறந்த தலைமை பண்பு வேண்டும். டிரம்ப் அதற்கு தயாராக இல்லை. அவர் உறைந்தார். செயல்பட தவறிவிட்டார். பீதி அடைந்தார்” என கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad