எம்.சி.சி. உடன்படிக்கை கிழித்தெறியப்படுமா? - சபையில் சஜித் கேள்வி - News View

About Us

About Us

Breaking

Thursday, September 10, 2020

எம்.சி.சி. உடன்படிக்கை கிழித்தெறியப்படுமா? - சபையில் சஜித் கேள்வி

தேர்தல் காலத்தில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளின் பிரகாரம் உத்தேச எம்.சி.சி. உடன்படிக்கை கிழித்தெறியப்படுமா? என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேள்வியெழுப்பினார். 

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை 27/2 கீழ் எழுப்பிய கேள்வியின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

கடந்த ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற தருணத்தில் பிரதான பேசுபொருளாக எம்.சி.சி. உடன்படிக்கைதான் இருந்தது. உடன்படிக்கை தாம் ஆட்சிக்கு வந்தால் கிழித்தெறியப்படுமென சமகால அரசாங்கம் கூறியிருந்தது.

என்றாலும், தேர்தலின் பின்னர் உடன்படிக்கை மீள் மதிப்பீடு செய்யப்படுமென அரசாங்கம் அறிவித்ததுடன், அதற்காக விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.

மதிப்பீட்டு குழுவின் அறிக்கை கடந்த ஜுலை மாதம் 23ஆம் திகதி அரசாங்கம் வெளியிட்டது. உத்தேச உடன்படிக்கையில் நாட்டுக்கு பாதகமான பல காரணிகள் உள்ளதாகவும் அவற்றை திருத்தியமைக்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட தரப்பு திருத்தங்களுக்கு இணக்கம் வெளியிடாவிட்டால் உடன்படிக்கையில் கைச்சாத்திடப்படுவது நிராகரிக்கப்பட வேண்டுமெனவும் மதிப்பீட்டு குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டால் தலதா மாளிகையை வழிபட செல்லும் போது பாதையின் ஒரு பகுதி அமெரிக்காவுக்கு சொந்தமாகவும் மறுபகுதி இலங்கைக்கு சொந்தமாகவும் மாறுமென சமகால அரசாங்கம் கூறியிருந்ததுடன், உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டால் நாட்டில் இரத்த ஆறு ஓடும் எனவும் கூறியிருந்தது.

ஆனால், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் உத்தேச எம்.சி.சி உடன்படிக்கையில் 30 சதவீதமான நன்மையானவை எனவும் 70 சதவீதமானவை நாட்டுக்குப் பாதகமானவை எனவும் ஒரு சூத்திரத்தை தயாரித்திருந்தனர். தற்போது இந்த விடயத்தில் அரசாங்கம் மௌனியாகியுள்ளது. ஆகவே, தேர்தல் காலத்தில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியின் பிரகாரம் எம்.சி.சி. உடன்படிக்கை கிழித்தெறியப்படுமா? எனக் கேள்வியெழுப்பினார்.

லோரன்ஸ் செல்வநாயம், சுப்பிரமணியம் நிஷாந்தன

No comments:

Post a Comment