பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் கருத்தறியப்பட்டே நிறைவேறும், வர்த்தமானியில் வெளியானது 20 ஆவது முழுமையான வடிவமல்ல, உயர் நீதிமன்றின் வியாக்கியானமும் உள்வாங்கப்படும் என்கிறார் கம்மன்பில - News View

Breaking

Post Top Ad

Thursday, September 10, 2020

பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் கருத்தறியப்பட்டே நிறைவேறும், வர்த்தமானியில் வெளியானது 20 ஆவது முழுமையான வடிவமல்ல, உயர் நீதிமன்றின் வியாக்கியானமும் உள்வாங்கப்படும் என்கிறார் கம்மன்பில

வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 20 ஆவது திருத்த சட்ட நகல் முழுமையானதல்ல. பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் மற்றும் உச்ச நீதிமன்ற வியாக்கியானம் என்பவற்றை உள்வாங்கியே இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்படுமென இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவை பெறுவதற்கு ஏற்ற வகையில் அதில் மாற்றங்கள் செய்யத் தயாரெனவும் கூறிய அவர், 19 ஆவது திருத்தத்திற்கு நடு இரவு வரை திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

20 ஆவது திருத்தம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர், பொதுமக்களினதும் கட்சிகளினதும் கருத்துக்களை பெற இரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னர் சட்டமூலம் நீதி அமைச்சரினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மம்பில, 20 ஆவது திருத்த யோசனை வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள், எதிரணி, அமைப்புகள் இது தொடர்பில் யோசனைகள் முன்வைத்து வருகின்றன. தனிப்பட்ட ரீதியிலும் யோசனைகள் எமக்கு வழங்கப்படுகிறன. இரு வார காலம் இதற்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் இது சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் நீதிமன்றம் செல்ல ஒரு வார காலம் வழங்கப்படும்.

20 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு தேவையா அல்லது மூன்றில் இரண்டு பெரும்பான்மையில் நிறைவேற்ற முடியுமா? என உச்ச நீதிமன்றம் அறிவிக்கும். மக்களினதும் கட்சிகளினதும் கருத்துகளையும் உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் உள்வாங்கி பாராளுமன்றத்தில் தேவையான மாற்றங்களுடன் இது நிறைவேற்றப்படும் என்றார்.

20 ஆவது திருத்த சட்டமூலத்தில் குறைபாடுள்ளதாக சட்டத்தரணி மனோகர டி சில்வா கூறியிருப்பது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அதனை ஏற்கிறோம். இதில் குறைபாடுகள் இருந்தாலும் வர்த்தமானியை மாற்ற முடியாது. முன்வைக்கப்படும் கருத்துக்கள் குழுநிலையில் ஆராயப்பட்டு உகந்த திருத்தங்கள் செய்யப்படும் என்றார்.

சுதந்திரக் கட்சியின் ஆதரவு பற்றியும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பெற எதிரணியின் ஆதரவு தேவைப்படுமா? என்பது பற்றியும் வினப்பட்டது. இதற்குப் பதிலளித்த அமைச்சர் கம்மம்பில, 17 மற்றும் 19 ஆம் திருத்தங்கள் குழுநிலையில் தான் திருத்தப்பட்டன.

பெருமளவில் அவற்றில் மாற்றம் செய்யப்பட்டன. வர்த்தமானியில் வெளியிடப்படும் சட்டமூலமன்றி வேறொன்றுதான் நிறைவேறுகிறது என்றார்.

ஷம்ஸ் பாஹிம்

No comments:

Post a Comment

Post Bottom Ad