சபாநாயகராகப் பதவி வகித்த காலத்தில் பதவியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியவர் கரு ஜயசூரிய - News View

About Us

About Us

Breaking

Thursday, September 24, 2020

சபாநாயகராகப் பதவி வகித்த காலத்தில் பதவியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியவர் கரு ஜயசூரிய

20 வது திருத்தத்தின் மூலம் சர்வாதிகார ஆட்சியாளராக உருவாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நடவடிக்கை எடுப்பதாக கரு ஜயசூரிய தெரிவிக்கும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிக்கின்றோம்.

அரசியலமைப்புக்கான 20 வது திருத்தத்தைக் கொண்டு வந்து சர்வாதிகார ஆட்சியாளராக உருவாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நடவடிக்கை எடுத்து வருதாக நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய முன்வைத்துள்ள குற்றச்சாட்டை புத்திஜீவிகள் முற்றாக நிராகரித்துள்ளனர்.

அரசியலமைப்புக்கான புதிய திருத்தத்துடன் கோட்டாபய ராஜபக்‌ஷ தான்தோன்றித்தனமாக செயற்படுவார் என்று கருத்து தெரிவித்துள்ள கரு ஜயசூரியவுக்கு தம் கண்டனங்களை தெரிவித்துள்ள புத்திஜீவிகள், பதவியொன்றைப் பெற்றிருந்த போது அதனை மிகவும் மோசமான முறையில் பாவித்தவர் மேற்படி குற்றச்சாட்டைத் தெரிவித்திருக்கும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவே அன்றி ஜனாதிபதி அல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பாராளுமன்ற சபாநாயகராகப் பணியாற்றிய காலப்பகுதியில் கரு ஜயசூரிய அப்பதவியின் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தான்தோன்றித்தனமாகச் செயற்பட்டதை அண்மைய கால வரலாற்றை அறிந்த எவரும் மறந்திருக்க மாட்டார்கள். 

2018 ஒக்டோபர் 26 ஆம் திகதி அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அப்பதவியிலிருந்து நீக்கி விட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமராக நியமித்தார்.

இந்த நடவடிக்கைக்கு ஏற்ப பாராளுமன்ற செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குப் பதிலாக தமக்கு கிடைக்கப் பெறாத அதிகாரங்களைப் பாவித்து அன்று கரு ஜயசூரிய செயற்பட்ட விதம் இன்றும் எமது நினைவில் உள்ளது.

அன்று ஜனாதிபதியாகப் பதவி வகித்த மைத்திரிபால சிறிசேனவுடன் ஐக்கிய தேசிய முன்னணியில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்த அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்தி எடுத்த தீர்மானத்திற்கு ஏற்ப பாராளுமன்ற செயற்பாடுகளை முன்னெடுக்காத கரு ஜயசூரிய, பாராளுமன்ற செயற்பாடுகளை சீர்குலைவுக்கு உள்ளாக்கினார்.

இவ்வாறு தமது பதவிக்கு உட்படாத அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்திய கரு ஜயசூரிய நாட்டை சீர்குலைத்த விதம் தொடர்பில் 2018 ஆம் ஆண்டின் 52 நாட்கள் ஆட்சி காலப் பகுதியில் பிரபல பத்திரிகையொன்றுக்கு சட்டத்தரணி கிரிஷ்மால் வர்ணசூரிய எழுதிய கட்டுரையொன்றில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

'புதிய பிரதமர் நியமிக்கபட்டதைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் உருவாகிய நிலைமையை குடிமகன் ஒருவன் என்ற வகையில் நான் நகைச்சுவைக் காட்சியாகவே பார்க்கின்றேன். இது முதலில் நாட்டின் அரசியல் யாப்புடன் சம்பந்தப்பட்ட பிரச்சினை. சகலரும் அரசியலமைப்பை மதிக்காத காரணத்தினால் இந்த கவலைக்குரிய நிலைமை ஏற்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்க அதிகாரம் மற்றும் நீதித்துறை ஆகிய ஸ்தாபனங்களின் அதிகாரங்கள் ஒன்றாக இருப்பதாக தவறான கருத்துண்டு. இந்நாட்டில் அரசியலமைப்பின் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட குடியரசே உள்ளது. அதனால் இம்மூன்று ஸ்தாபனங்களுக்கும் அரசியலமைப்பின் ஊடாகவே அதிகாரம் கிடைக்கப் பெறுகின்றது.

இந்த யாப்புக்கு மக்கள் மூலமே அதிகாரம் கிடைக்கப் பெறுகின்றது. இம்மூன்று நிறுவனங்களும் மக்களுக்கு சேவையாற்றுபவை. அவர்கள் தற்காலிக பொதுநம்பிக்கையின் அடிப்படையில் மக்கள் ஆணையின் அதிகாரத்தை செயற்படுத்துகின்றனர். இந்நாட்டில் இன்னும் வெஸ்ட்மினிஸ்டர் முறைமைதான் செயற்படுவதாக சிலர் நம்பிக் கொண்டிருக்கின்றனர். பிரதமர் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுவதாக சிலர் நம்புகின்றனர். ஆனால் அவை அவ்வாறு இடம்பெறுவதில்லை. இந்நாட்டில் பிரதமர் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுவதில்லை. ஜனாதிபதித் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி, பொதுத்தேர்தல் மூலம் தெரிவாகும் மக்கள் பிரதிநிதிகளில் இருந்து பிரதமரையும் அமைச்சரவையும் நியமிக்கின்றார்.

இக்குடியரசின் அரசாங்கம் அமைச்சரவையாகும். அமைச்சரவையின் தலைவர் ஜனாதிபதியாவார். நாட்டில் இருப்பது ஜனாதிபதியின் அரசாங்கமாகும். இங்கு அடிப்படைப் பிரச்சினை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி, பிரதமர் ஒருவரை நியமிக்கும் போதே ஏற்பட்டது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினால் பிரதமர் ஒருவர் நியமிக்கப்படுவது சட்டரீதியானது அல்ல என்று கருத முடியும். அப்போது சபாநாயகர் அதனை அங்கீகரிக்க முடியாது என்று குறிப்பிடலாம்.

அரசியலமைப்பை விளக்கும் பொறுப்பு இல்லாவிட்டாலும் அதனை வரையறை செய்வதற்கான சந்தர்ப்பதைப் பெற்றுக் கொள்ள வேண்டி இருந்தது. அரசியலமைப்பின்படி யாப்பு தொடர்பில் விளக்கும் பொறுப்பு உச்சநீதிமன்றத்திற்கு உரியது. அதற்கான அதிகாரத்தை உச்சநீதிமன்றத்திற்கே மக்கள் வழங்கியுள்ளனர். அந்த யாப்பை உச்சநீதிமன்றத்தின் சவாலுக்கு உட்படுத்தாமல் வேறு நிறுவனங்கள் அந்த நியமனங்களை நிராகரிப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. அங்குதான் முதலாவது தவறு ஆரம்பமானது.

அதன் பின்னர் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்தனர். நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வரும் போது பின்பற்றப்பட வேண்டிய ஒழுங்குமுறைகள் இச்சமயம் பின்பற்றப்படவில்லை. அதேவேளை இப்பிரச்சினை உச்சநீதிமன்றத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. இதேநேரம் ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பில் வியாக்கியானத்தை கோரி இருந்தார். நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள எந்தவொரு விடயமும் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை என்பது பாராளுமன்றம் பின்பற்றும் சம்பிரதாயமாகும்.

இதேவேளை பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தது. அதற்கு ஏற்ப பாராளுமன்றம் வழமை போன்று கூட்டப்பட்டதோடு பாராளுமன்ற கூட்டத்தொடரும் நடத்தப்பட்டது.

பொதுவாக பாராளுமன்றக் கூட்டத்தொடர் தொடர்பில் பின்பற்றப்பட வேண்டிய சட்ட திட்டங்கள் உள்ளன. அதன்படி நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படும் மனுக்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதிக்க முடியாது. என்றாலும் நீதிமன்ற நடவடிக்கைகளில் பாராளுமன்றம் நேரடியாகவோ பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலமோ அழுத்தம் பிரயோகிக்கின்றது என்ற சந்தேகம் எழுந்தது. 

சில பாராளுமன்ற உறுப்பினர்கள் நீதியரசர்கள் தீர்ப்பை வழங்க முன்னரே தீர்ப்பு தொடர்பான கருத்துக்களை தெரிவித்தமை இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. நீதியரசர்கள் தீர்ப்பை வழங்க முன்னரே தீர்ப்பு தொடர்பான கருத்துக்களை அவர்கள் முன்வைக்கின்றார்கள் என்றால் அவர்கள் அனைத்தையும் அறிந்த ஞானிகளாக இருக்க வேண்டும். இருபது வருடங்கள் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட என்னைப் போன்ற சட்டத்தரணிகளால் கூட அது தொடர்பில் தெளிவாக எதனையும் முன்கூட்டி கூற முடியாது.

நிலைமை இவ்வாறு இருக்கையில், நீதியரசர்களின் நடவடிக்கைகள் குறித்து அவர்கள் எவ்வாறு அறிந்தார்கள் என்பது குறித்து கேள்வி எழுகின்றது. நீதிமன்ற நீதியரசர்களை நெருக்கடிகளுக்கு உள்ளாக்கும் வகையில் அழுத்தத்தைப் பிரயோகிக்க முடியும் என அரசியல்வாதிகள் கருதுகிறார்கள் போலும். ஆனால் நீதியரசர்கள் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். என்றாலும் இவ்விதமான குழப்பகர நிலை ஏற்பட கரு ஜயசூரியவின் நடவடிக்கைகளே காரணமாக அமைந்தன.

இதேவேளை, அன்று கரு ஜயசூரிய செயற்பட்ட விதத்தைக் கண்டித்து தேசிய உரிமைகள் அமைப்பின் தலைவரும் தேசப்பற்றுள்ள பிக்குகள் முன்னணியின் செயலாளருமான பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்திருந்த கருத்துக்கள் இன்றும் எம் நினைவுக்கு வருகின்றன.

பாராளுமன்றத்தின் சபாநாயகராக நியமிக்கப்படுபவர் பொதுமக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளில் ஒருவராவார். அவர் எந்தக் கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்பவராக இருந்த போதிலும் இப்பதவிக்கு தெரிவானது முதல் பக்கம் சாராது நடுநிலை போக்கைக் கடைபிடிக்க வேண்டும். இந்நாட்டு பாராளுமன்ற வரலாற்றில் இற்வைரையும் சபாநாயகர்கள் அவ்வாறு செயற்பட்டிருந்தாலும் கரு ஜயசூரிய அதற்கு அப்பால் சென்று ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஆதரவாக செயற்பட்டார்.

2018.11.14 ஆம் திகதி ஜனாதிபதியால் கூட்டப்பட்ட பாராளுமன்றக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி அனுப்பிய அறிக்கையை அவர் சபைக்கு முன்வைக்கவில்லை. அத்தோடு ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெரும்பான்மை இருப்பதாகக் காட்டுவதற்கு நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்து வாக்கெடுப்பை நடத்தினார். இது பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கு முரணான செயலாகும். அதன் ஊடாக ஜனாதிபதி நியமித்த பிரதமரை நீக்கி விட்டு ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக்க அவர் முயற்சி செய்தார்.

கரு ஜயசூரியவின் இந்த அநீதியான செயற்பாட்டின் மூலம் பெரிதும் மகிழ்ச்சியடைந்த ரணில் விக்கிரமசிங்க இலக்கம் 01 ஐ பெரிதாக எழுதிக் கொண்டு நானே தலைவர் என்று எவ்வித வெட்கமும் இன்றி உலகிற்கு காட்டினார்.

பாராளுமன்றத்தில் சபாநாயகரின் இந்நடவடிக்கைகளினால் 14ஆம், 15 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் பெரும் குழப்பகர நிலை ஏற்பட்டது. அது முழு உலகிற்கும் தெரிய வந்தது. அதன் மூலம் எமது பாராளுமன்றத்தின் உயர் கௌரவம் குலைந்தது. அவ்வாறான நிலைமை கருஜயசூரிய சபாநாயகராக இருந்ததன் விளைவாகவே ஏற்பட்டது. சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கரு ஜயசூரியவை 'ஊன்றுகோல் ஜயசூரிய' எனக் கேலி செய்யும் அளவுக்கு நிலைமை ஏற்பட்டது. அதற்கு அவரது தவறான செயற்பாடுகளே காரணமாகும்.

பாராளுமன்றத்திற்கு வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெரும்பான்மை உள்ளதெனக் காட்டியதால் அவர்கள் கை தட்டவும் சபாநாயகர் கரு ஜயசூரியவே காரணமாக அமைந்தார். இவற்றை நோக்கும் போது ரணில் விக்கிரமசிங்க மாத்திரமல்ல கரு ஜயசூரியவும் எமது தாய்நாட்டுக்கு எதிராக மேற்குலகத்தினரால் இயக்கப்படுபவர்களாக விளங்குகின்றார். 

பாராளுமன்ற வரலாற்றிலேயே கெட்ட பெயரைச் சம்பாதித்துள்ள முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவை நீக்க வேண்டும் என்பது எம்மைப் போன்று நாட்டின் பெரும்பான்மை மக்களின் கருத்து என்பதை பெங்கமுவே நாலக தேரரின் கருத்து அன்றே வெளிப்படுத்தியது.

இவ்வாறு நாட்டை குழப்பத்துக்கு உள்ளாக்கிய கரு ஜயசூரிய முதற்தடவையாக கொழும்பு மாநகர சபையின் மேயராகப் போட்டியிட்ட சந்தர்ப்பத்தில் 'கரு வந்தால் சூரியன் உதிக்கும்' என்றார். ஆனால் அவர் மேயராக இருந்த காலத்தில் எந்தவொரு அபிவிருத்தி நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அவரது காலத்தில் கொழும்புக்கு ஒளி கிடைக்கவில்லை. இருளே சூழ்ந்திருந்தது எனப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். 

இவ்வாறு தனக்கு பதவி கிடைத்த சந்தர்ப்பங்களில் அதன் பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றாது தப்பியோடியதல்லாமல் தலைமை வகிக்கக் கூட திறனற்ற கரு ஜயசூரிய போன்றோர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கும் அவர் முன்னெடுத்துச் செல்லும் 'சுபீட்சத்தின் நோக்கு' தேசிய கொள்கைத் திட்டத்திற்கும் தடையை ஏற்படுத்தி பொதுமக்களின் சமூக, பொருளாதார, அரசியல் வெற்றியை பின்நோக்கி தள்ள முயற்சிக்கின்றனர் என்பது தெளிவாகத் தெரிகின்றது. 

கரு ஜயசூரிய போன்றோர் எவ்வாறு செயற்பட்டாலும் ஜனாதிபதி முன்னெடுக்கும் திட்டங்களை பின்நோக்கித் தள்ள இந்நாட்டின் தேசியப் பாதுகாப்பு, மற்றும் மக்களின் சமூக நலன்களை முன்னிலைப்படுத்தி செயற்படும் பொதுமக்கள் ஒரு போதும் இடமளிக்க மாட்டார்கள்.

தினகரன்

No comments:

Post a Comment