“இணையத்தள தொடர்பாடல் வலையமைப்பை வழங்குங்கள்” - தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் அலி சப்ரி ரஹீம் எம்.பி கோரிக்கை! - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 9, 2020

“இணையத்தள தொடர்பாடல் வலையமைப்பை வழங்குங்கள்” - தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் அலி சப்ரி ரஹீம் எம்.பி கோரிக்கை!

கல்பிட்டி பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட முதலைப்பாளி உள்ளிட்ட பல கிராமங்களில் தொலைபேசிகளுக்கான இணையத்தள தொடர்பாடல்களுக்கு போதுமான வலையமைப்பு (Network) இல்லாமையால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுவதாகவும், இது தொடர்பில் தொழில்நுட்ப அதிகாரிகளை அனுப்பி இதற்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க ஆவன செய்யுமாறும் பிரதான மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கல்பிட்டி பிரதேசத்துக்கு அண்மையில் தாம் விஜயம் செய்திருந்த போது, கையடக்கத் தொலைபேசிகளுக்கான சமிக்ஞைகள் இல்லாத குறையினை அவதானிக்க முடிந்தது எனவும் அவர் தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

நவீன உலகளாவிய செயற்பாடுகளுடன் இணையப் பயன்பாடு பின்னிப்பிணைந்துவிட்டதனால், கல்பிட்டி போன்ற சுற்றுலாத்துறை முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு, இந்தத் தொடர்பாடல் சேவை மிகவும் அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா டெலிகொம், டயலொக், மொபிட்டெல் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இது தொடர்பில் கவனம் செலுத்தி, வாடிக்கையாளர்களுக்கு இடையறாத சேவையை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் பாலக்குடா, பள்ளிவாசல்துறையில் தொலைபேசிக் கம்பங்கள் இருந்த போதும், முதலைப்பாளி, கப்பலடி, முசல்பிட்டி, கண்டல்குடா மற்றும் தொண்ணூறு ஏக்கர் கிராமங்களில் வாழும் மக்கள் இணைய வழி மூல தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியாது அவதிப்படுவதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர், முதலைப்பாளியினை மையப்படுத்தி மேற்குறிப்பிட்ட சிரமங்களுக்கும் கஷ்டங்களுக்கும் உரிய நடவடிக்கை எடுத்து, மக்களின் தொடர்பாடல் விருத்தியை இலகுவாக்க நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment