(நா.தனுஜா)
குற்றச் செயல்களைப் புரியும் சிறுவர்களை நன்னடத்தைப் பாடசாலைகளுக்கு அனுப்பி வைத்தல் மற்றும் வேலைக்கு அமர்த்துதல் ஆகிய விடயங்களில் சிறுவர்களின் வயதெல்லையை உயர்த்துவதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு யுனிசெப் அமைப்பு பாராட்டுத் தெரிவித்திருக்கிறது.
சிறுவர் மற்றும் இளைஞர்கள் தொடர்பான கட்டளைச் சட்டத்தின் ஒழுங்கு விதிகளுக்கு அமைய 14 வயதிற்குக் குறைந்தவர்கள் சிறுவர்களாக வரையறுக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் இளம் குற்றவாளிகள், நன்னடத்தைப் பாடசாலை தொடர்பான கட்டளைச் சட்டத்திற்கு அமைய 16 - 22 வயதிற்கு உட்பட்டவர்கள் இளைஞர்கள் என்று வரையறுக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி 16 வயதிற்குக் குறைந்த சிறுவர்களால் மேற்கொள்ளப்படும் குற்றங்களுக்காக அவர்கள் நீதிமன்றத்தினால் நன்னடத்தைப் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். எனினும் 16 வயதிற்கு மேற்பட்டவர்களால் மேற்கொள்ளப்படும் குற்றங்களுக்காக அவர்களை சிறைச்சாலையில் அடைத்தல், இளம் குற்றவாளிகளுக்கான நன்னடத்தைப் பாடசாலைக்கு அனுப்புதல் போன்ற தீர்ப்புக்களை நீதிமன்றம் வழங்குகின்றது.
இந்நிலையில் பதினெட்டு வயதிற்குக் குறைந்தவர்களை சிறுவர்கள் என்றும் 18 - 22 வயதிற்கு இடைப்பட்டவர்களை இளைஞர்கள் என்றும் வரையறுக்கும் வகையில் சிறுவர் மற்றும் இளைஞர் தொடர்பான கட்டளைச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கும் வேலைக்கு அமர்த்தக் கூடிய சிறுவர்களின் வயதெல்லையை 14 இலிருந்து 16 ஆக உயர்த்துவதற்கும் கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இந்தத் தீர்மானத்திற்குப் பாராட்டுத் தெரிவிக்கும் வகையிலான கடிதமொன்றை யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி ரிம் சுட்டோன் நீதியமைச்சர் அலி சப்ரிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
அக்கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது குற்றச் செயல்களைப் புரியும் சிறுவர்களை நன்னடத்தைப் பாடசாலைகளுக்கு அனுப்பி வைப்பதற்கான சட்டத்தில் சிறுவர்களுக்குரிய வயதெல்லையை 18 ஆக உயர்த்துவதற்கும், வேலைக்கு அமர்த்தக் கூடிய வயதெல்லையை 14 இலிருந்து 16 ஆக உயர்த்தும் வகையில் திருத்தங்களை மேற்கொள்வதற்கும் அமைச்சரவை தீர்மானித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.
அதுமாத்திரமன்றி சிறுவர் உரிமைகளைப் பொறுத்தவரையில் இவ்வாறானதொரு முக்கியத்துவம் வாய்ந்த மாற்றத்தை ஏற்படுத்தியமைக்காக உங்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதுடன், சிறுவர் உரிமைகள் விவகாரங்களில் நீதியமைச்சினால் மேற்கொள்ளப்படக் கூடிய முன்னேற்றகரமான நகர்வுகளுக்கு எமது பூரண ஆதரவினை வழங்குவதற்கும் தயாராக இருக்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment