அமைச்சர் டக்ளஸின் முயற்சியினால் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் தரமுயர்த்தல் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 10, 2020

அமைச்சர் டக்ளஸின் முயற்சியினால் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் தரமுயர்த்தல்

கடற்றொழில் அமைச்சரும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் தரமுயர்த்தப்பட்டுள்ளன.

பாடசாலை சமூகத்தினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை தொடர்ந்து அமைச்சரினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பயனாக கிளி. இராமநாதபுரம் மகா வித்தியாலயம் மற்றும் கிளி. இராமநாதபுரம் கிழக்கு அ.த.க. பாடசாலை ஆகியவை தரமுயர்த்தப்பட்டுள்ளது.

1956 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தில் 1995 ஆண்டிலிருந்து உயர்தர கலை, வர்த்தகப் பிரிவுகளுக்கான வகுப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், தற்போது சுமார் 850 மாணவர்கள் கல்வி கற்று வருகின்ற நிலையில் பாடசாலையில் உயர் தரத்திற்கான கணித, விஞ்ஞானப் பிரிவுகளை ஆரம்பிக்க ஒத்துழைக்குமாறு பாடசாலை சமூகத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோன்று, கிளிநொச்சி இராமநாதபுரம் கிழக்கு அ.த.க. பாடசாலை சமூத்தினர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய குறித்த பாடசாலையில் உயர்தர கலைப் பிரிவுகள் பாடநெறிகள் ஆரம்பிக்கப்பட்டு 1சி பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.

தங்களுடைய நீண்ட நாள் கோரிக்கைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கை காரணமாக நிறைவேறியிருப்பதையிட்டு மகிழ்ச்சி வெளியிட்டுள்ள சம்மந்தப்பட்ட பாடசாலை சமூகத்தினர் அமைச்சருக்கு தமது நன்றியை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment