நேற்றையதினம் (05) இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 86,432 ஆக கணக்கிடப்பட்டுள்ளது.
இது உலக அளவில் ஒரே நாளில் அதிகளவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கையாக பதிவாகியுள்ளது.
கடந்த ஜூலை 19ஆம் திகதி அமெரிக்காவில் அதிகூடிய அளவில் 74,354 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர். இதுவே உலக அளவில் ஒரு நாளில் பதிவான கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையாக அமைந்திருந்தது.
ஆயினும் கடந்த ஓகஸ்ட் 27ஆம் திகதி இந்த சாதனையை முறியடித்த இந்தியா, 75,760 தொற்றாளர்களை அன்றைய தினம் அடையாளம் கண்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து இந்தியாவில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவது நாளாந்தம் அதிகரித்தவாறே அமைந்து வருகின்றது.
நேற்று முன்தினம் (04) 83,341 பேரும் நேற்று (05) 86,432 பேரும் இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அந்நாட்டில் மேற்கொள்ளப்படும் PCR சோதனைகள் அதிகரித்துள்ளதற்கு அமைய, இவ்வாறு தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
அதற்கமைய, PCR சோதனைகள் மேலும் அதிகரிக்கப்படும் பட்சத்தில் நாளாந்த தொற்றாளர்கள் அடையாளம் மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் பரவி வருகிறது. உலக அளவில் இந்தியா கொரோனா பாதிப்பில் 3ஆவது இடத்தில் தொடர்ந்து உள்ளது.
இந்தியாவில் இதுவரை 4,023,179 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,107,223 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் 69,561 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கடந்த ஜூன் 17ஆம் திகதி 2,003 பேர் மரணமடைந்தமை, அங்கு ஒரே நாளில் பதிவான அதிகூடிய மரண எண்ணிக்கையாக அமைந்தது.
அதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை 23ஆம் திகதி 1,129 பேர் மரணமடைந்தமை பதிவாகியிருந்தது.
நேற்றையதினம் இந்தியாவில் 1,089 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக, உலக சுகாதார ஸ்தாபனத்தின் புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் கொரோனா காரணமாக மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 8,43,844 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பில் 3ஆவது இடத்தை பிடித்துள்ள தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,51,827.
தமிழகத்தில் இதுவரை 7,687 பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில் தற்போதைய நிலையில் 51,633 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3,92,507 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இதேவேளை உலக அளவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில், 6,243,911 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இதுவரை அமெரிக்காவில் கொரோனாவால் 188,535 பேர் உயிரிழந்துள்ளனர்.
இப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் பிரேசில் காணப்படுவதோடு, அங்கு இதுவரை 4,092,832 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 126,203 பேர் உயிரிழிந்துள்ளனர்.
உலக அளவில் இதுவரை 26,782,582 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 878,237 பேர் மரணமடைந்துள்ளனர். அத்துடன் 17,843,929 பேர் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இந்தியாவுக்கு அடுத்தபடியாக, நான்காவது இடத்தில் ரஷ்யாவில் இதுவரை 1,017,131 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அங்கு 17,707 பேர் இதுவரை பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் தற்போது வரை 3,121 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இதில் 2,918 பேர் குணமடைந்துள்ள நிலையில், 12 பேர் மரணமடைந்துள்ளதோடு, ஏனைய 191 பேரும் சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை,கடந்த ஏப்ரல் 30ஆம் திகதிக்கு பின்னர் சமூகத்தில் எவரும் அடையாளம் காணப்படவில்லை என்பதோடு, கடந்த ஜூலை 07ஆம் திகதி கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்த கைதி ஒருவர் வெலிக்கடை சிறைச்சாலையில் அடையாளம் காணப்பட்டிருந்தார். குறித்த புனர்வாழ்வு மையத்துடன் தொடர்புடைய பணியாளர்கள் ஒரு சிலர் இத்தொற்றை அடுத்து அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
RSM
No comments:
Post a Comment