
தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இலங்கை அரசாங்கத்துடன் நேரடியாக பேசத் தயாராக இல்லை என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் (சனிக்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் எம்.கே. சிவாஜிலிங்கம் மேலும் கூறியுள்ளதாவது, “தற்போதைய அரசாங்கம் 20ஆவது திருத்தத்தை கொண்டு வரலாம். அல்லது எந்த திருத்தத்தையும் கொண்டு வரலாம்.
மேலும, 13ஆம் திருத்தத்தை இல்லாமல் செய்ய வேண்டுமென்றெல்லாம் கோஷங்கள் எழுப்பப்படுகின்றது. அது இருக்கப் போகின்றதா இல்லையா என்பது குறித்து தெரியவில்லை.
அவர்களுக்கும் தங்களது இரண்டாம் தரப்பு என்று சொல்லக்கூடிய தலைமைகளை திருப்தி ஏற்படுத்தக் கூடிய தேவை இருக்கின்ற காரணத்தினால், அதனை இல்லாமல் செய்வது அவர்களுக்கு கஷ்டமாக இருக்கும்.
ஆனால், அங்கு இனவாத கூச்சல்கள் எழுந்துகொண்டிருக்கின்றன. இதன் மத்தியில்தான் இனப்பிரச்சினைக்கான புதிய அரசியல் தீர்வை எங்களுடைய மக்கள் விரும்பக் கூடிய வகையில், வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் தங்களைத் தங்கள் ஆளக்கூடிய ஒரு ஆட்சியை, அதி உச்சமாக சமஷ்டியை பெறாத நிலையில் இலங்கைக்குள் எமக்கு தீர்வு கிடைக்காது.
எனவே அரசாங்கத்துடன் நேரடியாக பேச விருப்பமில்லை. வெளிநாட்டு மத்தியஸ்தர்கள் ஊடாகவே பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment