அர்மீனியா - அசர்பைஜான் நாடுகளுக்கு இடையே பயங்கர மோதல் - 69 பேர் பலி - அதிகரிக்கும் போர் பதற்றம் - News View

About Us

About Us

Breaking

Monday, September 28, 2020

அர்மீனியா - அசர்பைஜான் நாடுகளுக்கு இடையே பயங்கர மோதல் - 69 பேர் பலி - அதிகரிக்கும் போர் பதற்றம்

அர்மீனியா மற்றும் அசர்பைஜான் நாடுகளுக்கு இடையே நடந்துவரும் சண்டையில் இதுவரை 69 பேர் உயிரிழந்துள்ளனர்.

அர்மீனியா மற்றும் அசர்பைஜான் ஆகிய இரு நாடுகளும் ஒருங்கிணைந்த சோவித் யூனியனின் பகுதிகளாகவே இருந்தது. ஆனால் 1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்த பின்னர் அர்மீனியா மற்றும் அசர்பைஜான் ஆகியவை தனித்தனி நாடுகளாக அறிவிக்கப்பட்டது. 

அர்மீனியாவில் கிருஸ்தவ மதத்தினரும், அசர்பைஜானில் இஸ்லாமிய மதத்தினரும் பெரும்பான்மையாக உள்ளனர். இரு நாடுகளையும் எல்லையாக பிரிக்கும் பகுதியில் நகோர்னோ - கராபத் என்ற மாகாணம் அமைந்துள்ளது. 

இந்த மாகாணம் அசர்பைஜானின் அங்கம் என சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த மாகாணத்தில் பெரும்பாலானோர் அர்மீனிய ஆதரவாளர்களே வாழ்ந்து வந்தனர்.

இவர்கள் அசர்பைஜானில் இருந்து பிரிந்து சென்று அர்மீனியாவில் தான் சேரவேண்டும் என முடிவு செய்தனர். இதனால், சிறு குழுக்களாக இணைந்து அசர்பைஜானுக்கு எதிராக 1988 ஆம் ஆண்டு முதலே சிறு சிறு சண்டையில் ஈடுபட்டு வந்தனர். 

ஆனால் சோவியத் யூனியன் முடிவுக்கு வந்ததையடுத்து நகோர்னோ - கராபத் மாகாணத்தை மையமாக கொண்டு அர்மீனியா மற்றும் அசர்பைஜான் இடையே போர் வெடித்தது.

இந்த போரில் நகோர்னோ - கராபத் மாகாணத்தின் பெரும்பகுதியை அர்மீனியா கைப்பற்றியது. மேலும், அந்த மாகாணத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது. 

இதையடுத்து, அந்த மாகாணத்தை அர்மீனிய ஆதரவு மக்கள் நிர்வகித்து வந்தனர். மேலும், இதற்கு அர்மீனிய அரசும் உதவிகளை செய்துவந்தது. 

அன்றில் இருந்து நகோர்னோ - கராபத் மாகாணத்தை மையமாக கொண்டு பல ஆண்டுகளாக அர்மீனியா - அசர்பைஜான் இடையே மோதல்கள் அரங்கேறி வருகிறது. 

இந்த மோதல்களின் போது அர்மீனியாவுக்கு ரஷியா ஆதரவு அளித்து வந்துள்ளது. மேலும், இருநாடுகளுக்கு இடையேயும் அமைதியை நிலைநாட்ட முயற்சிகளை செய்து வருகிறது. ஆனால், அசர்பைஜானுக்கு துருக்கு ராணுவ ரீதியினான உதவிகளை வழங்கி வருகிறது.

இதற்கிடையில், அர்மீனியாவின் கட்டுப்பாட்டில் உள்ள நகோர்னோ - கராபத் மாகாணத்தின் தலைநகரான ஸ்டெபனாஹெட் பகுதியில் அசர்பைஜான் ராணுவத்தினர் நேற்று முன்தினம் திடீர் தாக்குதல் நடத்தினர். 

இதற்கு பதிலடியாக நகோர்னோ - கராபத் மாகாணத்தில் உள்ள அர்மீனிய ஆதரவு படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். மேலும், இந்த சண்டையில் அர்மீனிய ராணுவமும் நேரடியாக இறங்கியுள்ளது.

இதனால், நகோர்னோ - கராபத் மாகாணத்தில் அர்மீனிய ஆதரவு படையினருக்கும் - அசர்பைஜான் நாட்டின் படைகளுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. அர்மீனிய ஆதரவு படையினருக்கு அர்மீனிய ராணுவம் உதவி செய்து வருகிறது. 

இந்த சண்டை காரணமாக பொதுமக்கள், இரு நாட்டு படையினர் உட்பட பலர் உயிரிழந்து வருகின்றனர். பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கி இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நகோர்னோ - கராபத் மாகாணத்தில் நடந்து வரும் சண்டையில் இதுவரை 69 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 58 பேர் நகோர்னோ - கராபத் தன்னாட்சி மாகாணத்தில் உள்ள அர்மீனிய ஆதரவு படையினர், 9 பேர் அசர்பைஜான் நாட்டை சேர்ந்த பொதுமக்கள், மேலும், 2 பேர் அர்மீனிய நாட்டை சேர்ந்த பொதுமக்கள் ஆகும். 

ஆனால், இந்த மோதலின்போது தங்கள் தரப்பில் எத்தனை வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற விவரத்தை அசர்பைஜான் ராணுவம் தற்போதுவரை வெளியிடவில்லை.

அர்மீனியா - அசர்பைஜான் நாடுகளுக்கு இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளதால் பதற்றத்தை தணிக்க அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால், அசர்பைஜானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ள துருக்கி நெருப்புடன் விளையாட வேண்டாம் என அர்மீனியாவை பகீரங்கமாக எச்சரித்துள்ளது. ஆனால், அர்மீனியாவுடன் மிகவும் நட்பாகவும், ராணுவ ரீதியில் மிகுந்த பலம் வாய்ந்த நாடான ரஷியா பதற்றத்தை தணிக்க முயற்சிகள் மேற்கொண்டுவருகிறது.

துருக்கியின் ஆதிக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் ரஷியா நேரடியாக தனது ராணுவத்தை அசர்பைஜானுக்கு எதிராக களமிறக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

No comments:

Post a Comment