20 வது திருத்த மீளாய்வு குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் - கரு ஜயசூரிய - News View

About Us

About Us

Breaking

Saturday, September 19, 2020

20 வது திருத்த மீளாய்வு குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் - கரு ஜயசூரிய

(நா.தனுஜா) 

தம்மை ஆளும் மீயுயர் சட்டமான அரசியலமைப்பு எவ்வாறு திருத்தப்படுகின்றது என்பதைத் தெரிந்துகொள்ளும் உரிமை ஒவ்வொரு பிரஜைக்கும் இருக்கின்றது. எனவே அரசியலமைப்பிற்கான 20 வது திருத்தத்தை மீளாய்வு செய்வதற்கான குழுவின் அறிக்கை உடனடியாக பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியிருக்கிறார். 

முன்மொழியப்பட்டிருக்கும் அரசியலமைப்பிற்கான 20 வது திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு அரசாங்கம் அவசரம் காண்பிக்கக் கூடாது என்றும், முதலில் அந்த யோசனை விரிவான கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் கரு ஜயசூரிய தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றார். 

அதுமாத்திரமன்றி 19 வது திருத்தத்தின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட ஜனநாயகக் கட்டமைப்புக்கள் 20 வது திருத்தத்தின் மூலம் நீக்கப்படுவது குறித்தும் அவர் விசனம் வெளியிட்டிருந்தார். 

இந்நிலையில் இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவொன்றில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார். 

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட அரசியலமைப்பிற்கான 20 வது திருத்த யோசனையை மீளாய்வு செய்வதற்கான பிரதமரால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை தாமதமின்றி உடனடியாக பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். 

அரசியலமைப்பு என்பது ஒரு இரகசிய ஆவணமல்ல. தம்மை ஆளும் மீயுயர் சட்டத்தில் எத்தகைய திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதைத் தெரிந்துகொள்வதற்கான உரிமை நாட்டு மக்களுக்கு இருக்கின்றது. 

ஒன்றை செயற்படுத்துகின்ற நடைமுறையில் ஜனநாயகம் இல்லாவிடின், அந்த விடயக்கட்டமைப்பில் ஜனநாயகம் இருக்காது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

No comments:

Post a Comment