பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள தபாற்காரர் ஒருவர் 3 இலட்சம் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள், போதை மாத்திரைகள் மற்றும் ஐஸ் போதைப் பொருளுடன் பத்தரமுல்லை - படபொத்த பகுதியிலுள்ள விடுதியொன்றிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தலங்கம பொலிஸார் நேற்று முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 4 கிராம் 100 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள், 10 கிராம் ஐஸ் போதைப் பொருள், 5 போதை மாத்திரைகள் மற்றும் போதைப் பொருள் விற்பனையால் பெற்ற பணம் 43,000 ரூபா ஆகியன மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
கடந்த தேர்தலின் போது வாக்கு எண்ணும் நடவடிக்கையில் முறைகேடாக நடந்து கொண்ட காரணத்திற்காக வேலை நிறுத்தம் செய்யப்பட்ட குறித்த தபாற்காரர் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவதாக தலங்கம பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நலின் தில்ருக்கவிற்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்தே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் தங்கியிருந்த விடுதியில் அறையொன்றை மாதமொன்றிற்கு 15,000 ரூபா வாடகைக்கு எடுத்துள்ளதாகவும் அங்கிருந்தே போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் சேவையிலுள்ள போது போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஏற்கனவே ஒரு தடவை கைது செய்யப்பட்டவரென பொலிஸார் குறிப்பிட்டனர். இவ்வாறு 33 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment