அரசுடன் இணைந்து பணியாற்ற புலம்பெயர் சமூகத்திற்கு அழைப்பு - எவ்விதமான அச்சமும் கொள்ள வேண்டாம் என்கிறார் பிரதமர் - News View

Breaking

Post Top Ad

Thursday, September 10, 2020

அரசுடன் இணைந்து பணியாற்ற புலம்பெயர் சமூகத்திற்கு அழைப்பு - எவ்விதமான அச்சமும் கொள்ள வேண்டாம் என்கிறார் பிரதமர்

புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர் மற்றும் மக்கள் அமைப்புக்கள் எந்தவித அச்சமுமின்றி எம்முடன் இணைந்து பணியாற்ற வாருங்களென புலம்பெயர்ந்துள்ளவர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

புலம்பெயர்ந்துள்ள சில முதலீட்டாளர்களை சந்தித்தபோதே பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார். 

மேலும் இலங்கையின் முதலீடுகளை ஊக்குவித்தல் தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரதமர், கடந்த ஆட்சிக் காலத்தில் இலங்கையில் பல முதலீடுகளை மேற்கொள்ள வருகை தந்த புலம் பெயர்ந்து வாழும் இலங்கையராகிய நீங்கள் அனுபவித்த சிரமங்களை நாம் நன்கறிவோம், குறிப்பாக இலங்கையில் முதலீடுகளை செய்வதற்கு உள்ளூர் முகவர்கள் தரகுப் பணம் பெற முற்பட்டதால் நீங்கள் பலர் எமது நாட்டில் முதலீடு செய்வதை தவிர்த்து வெளியேறியுள்ளது எமக்கு மிகவும் வேதனை அளிக்கிறது.

எமது அரசு உங்களுக்கான முழுமையான பாதுகாப்பை உறுதிப்படுத்தும். அத்துடன் உங்களிடம் யாராவது தரகுப் பணம் அல்லது வேறு ஏதாவது தொல்லைகள் கொடுத்தால் நீங்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு நேரடியாக தெரியப்படுத்தலாம்.

குளிர், பனி என்று பாராமல் உங்களை வருத்தி நீங்கள் உழைக்கும் பணத்தை உங்கள் மண்ணில் நீங்கள் தைரியத்துடன் முதலீடு செய்வதற்கு எமது அரசு என்றும் உங்களுக்கு பக்க பலமாக செயற்படும்.

எம் அனைவரதும் அழகிய இலங்கைத் தீவை உங்கள் வரவால் வெகு விரைவில் இன்னும் பன்மடங்கு அழகிய மற்றும் வளம் கொழிக்கும் உலகம் திரும்பிப் பார்க்கும் நாடாக்குவதற்கு நாம் அனைவரும் கைகோர்த்து பயணிப்போமென்றும் பிரதமர் புலம்பெயர்ந்துள்ள முதலீட்டாளர்களிடம் நம்பிக்கை வெளியிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad