கடந்த திங்கட்கிழமை (17) நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்சாரத் தடை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, அமைச்சர் டலஸ் அளகப்பெருமவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையை ஆய்வு செய்து எதிர்வரும் புதன்கிழமை (26) கூடவுள்ள அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக, மின்சக்தி அமைச்சர் டலஸ் அளகப்பெரும தெரிவித்தார்.
இது தொடர்பான அறிக்கை, குறித்த குழுவினால் நேற்று (24) பிற்பகல் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த பிரச்சினைக்கு மின்சக்தி அமைச்சு தான் பொறுப்புக்கூற வேண்டும் என்று உறுதியானால், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க பின்நிற்க மாட்டேன் எனவும், பதவியைத் துறக்க தயார் எனவும் அமைச்சர் டலஸ் அளகப்பெரும ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
கெரவலபிட்டியவிலிருந்து மின்சாரம் வழங்கும் கிரீட் உப மின்நிலையத்தில் ஏற்பட்ட மனிதத் தவறு காரணமாக கடந்த 17 ஆம் திகதி பிற்பகல் 12.45 மணி முதல் சுமார் 7 மணி நேரத்திற்கு அதிகமான காலப் பகுதியில் நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து இது தொடர்பில் ஆராயவும், மீண்டும் இவ்வாறான விடயம் நிகழ்வதற்கான வாய்ப்பைக் குறைப்பதற்கான வழிகளைக் கண்டறியவும் 9 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தேசிய மின் கட்டமைப்பில் ஏற்பட்ட தடை குறித்து ஆராய மின்சக்தி அமைச்சினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவுக்கு, இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியாளர்கள் மற்றும் அத்தியட்சகர்களின் சங்கம், 8 விடயங்கள் அடங்கிய அறிக்கையொன்றை சனிக்கிழமை (22) சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment