எதிர்க்கட்சியின் பொறுப்புக்களை நாட்டினதும் மக்களினதும் நிலைமையை கருத்திற்கொண்டு மேற்கொள்வோம் - சஜித் பிரேமதாச - News View

About Us

About Us

Breaking

Monday, August 24, 2020

எதிர்க்கட்சியின் பொறுப்புக்களை நாட்டினதும் மக்களினதும் நிலைமையை கருத்திற்கொண்டு மேற்கொள்வோம் - சஜித் பிரேமதாச

எதிர்க்கட்சியின் பொறுப்புக்களை ...
(எம்.ஆர்.எம்.வஸீம்)

எதிர்க்கட்சியின் பொறுப்புக்களை நாட்டினதும் மக்களினதும் நிலைமையை கருத்திற்கொண்டு மேற்கொள்வோம். மக்களுக்கு நன்மை அளிக்கும் வேலைத்திட்டங்களுக்கு மாத்திரமே அரசாங்கத்துக்கு ஆதரவளிப்போம் என எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பொரளை பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலின்போதும் பாராளுமன்ற தேர்தலின்போதும் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி இருந்தது. அந்த வாக்குறுதிகளை தற்போது நிறைவேற்ற வேண்டும் என நாங்கள் அரசாங்கத்துக்கு தெரிவிக்கின்றோம். அதனை தாமதப்படுத்த முடியாது. அதற்கு தேவையான வேலைத்திட்டத்தை சமர்ப்பித்து, வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். 

அரசாங்கம் மேற்கொள்ளும் வேலைத்திட்டத்தில் மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கக் கூடிய, நாடு அபிவிருத்தியடைக் கூடிய அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாங்கள் ஆதரவளிப்போம்.

மேலும் வசதி குறைந்த குடும்பங்களுக்கு மாதாந்தம் மூவாயிரம் ரூபா நிவாரணப் பொதியொன்றை வழங்குவதாக அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது. எதிர்க்கட்சியில் இருக்கும் நாங்கள், அந்த நிவாரணத்தை அரசாங்கம் வழங்குகின்றதா என தேடிப்பார்ப்பது எமது பொறுப்பு. அவ்வாறு அரசாங்கம் அந்த நிவாரணத்தை வழங்காவிட்டால் அதற்கெதிராக குரல் கொடுப்பது எமது கடமை.

அத்துடன் பாராளுமன்றத்தில் நாங்கள் எதிர்க்கட்சியில் இருக்கின்றபடியால் அரசாங்கத்தின் அனைத்து விடயங்களையும் எதிர்க்க வேண்டும் என்றில்லை. எதிர்க்கட்சியின் பொறுப்புக்களை நாட்டினதும் மக்களினதும் நிலைமையை கருத்திற்கொண்டு உறுதியான தீர்மானங்களை மேற்கொள்வோம். அதற்கு நாங்கள் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை.

அத்துடன் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு நவீன முற்போக்கு பயணமொன்றை நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம். நாட்டுக்கு ஒத்துப்போகாத, நாட்டுக்கு பிரயோசனமற்ற மற்றும் பாதிப்பான எந்தவொரு விடயத்துக்கும் ஆதரவளிக்கப்போவதில்லை. அதனை கடுமையாக எதிர்ப்போம் என்றார்.

No comments:

Post a Comment