பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்த கோழி இறைச்சியில் கொரோனா தொற்று - சீனாவில் பரபரப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, August 13, 2020

பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்த கோழி இறைச்சியில் கொரோனா தொற்று - சீனாவில் பரபரப்பு

பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்த கோழி இறைச்சியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவில் உள்ள உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றி வெளிப்பட்ட கொரோனா வைரஸ், உலக நாடுகளையெல்லாம் தன் பிடியின் கீழ் கொண்டு வந்துள்ளது.

இந்த நிலையில், சீனாவில் ஷென்ஷென் நகரில், பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்த கோழி இறைச்சியின் மேற்பரப்பில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியை பரிசோதித்து பார்த்ததில், அதில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த கோழி இறைச்சியானது, பிரேசில் நாட்டின் தென் மாகாணமான அரோரா அலிமென்டோசில் உள்ள ஆலையில் இருந்து வந்தது என தகவல்கள் கூறுகின்றன.

இதன் காரணமாக ஷென்ஷென் நகர மக்கள், இறக்குமதி செய்த பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்கும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு உள்ளூர் அரசு நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது பற்றி அரசு தரப்பில் கூறுகையில், “இறக்குமதி செய்த பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் நீர் வாழ் பொருட்களை வாங்கும்போது நுகர்வோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இருப்பினும் அந்த கோழி இறைச்சியுடன் தொடர்பில் இருந்த நபர்களையும், தொடர்புடைய பிற தயாரிப்புகளையும் பரிசோதனைக்கு உட்படுத்தியதில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது.

சீனாவின் பிற நகரங்களில் இறக்குமதி செய்த பதப்படுத்தப்பட்ட கடல் உணவுகளின் ‘பேக்கேஜ்’ மேற்பரப்பை பரிசோதித்ததில் கொரோனா வைரஸ் தொற்று இருந்ததாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்தன.

சீனாவின் ஷான்டோங் மாகாணத்தின் வடக்கு நகரமான யெண்டாயில் இறக்குமதி செய்த பதப்படுத்தப்பட்ட கடல் உணவு பொருட்களின் 3 ‘பேக்கேஜ்’ மாதிரிகளை சோதித்ததில் அவற்றில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக தெரிய வந்துள்ளதாக அந்த நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதை சமூக ஊடகமான வெய்போவில் யெண்டாய் நகர அரசு நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இதே போன்று ஈக்குவடார் நாட்டில் இருந்து இறக்குமதி செய்த இறால் ‘பேக்கேஜ்’ மாதிரியை உஹூ நகரில் சோதித்ததில் அதிலும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. இந்த தகவல்கள் சீன நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

No comments:

Post a Comment