மூவின மக்களையும் இணைத்து அபிவிருத்தியில் பின்தங்கியுள்ள எமது மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதே எனது முக்கிய இலக்கு - தேசிய காங்கிரஸ் திகாமடுல்ல வேட்பாளர் ஏ.எல்.எம். சலீம் - News View

About Us

About Us

Breaking

Saturday, August 1, 2020

மூவின மக்களையும் இணைத்து அபிவிருத்தியில் பின்தங்கியுள்ள எமது மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதே எனது முக்கிய இலக்கு - தேசிய காங்கிரஸ் திகாமடுல்ல வேட்பாளர் ஏ.எல்.எம். சலீம்

அபிவிருத்தி உபாயங்கள் மற்றும் ...
கிழக்கிலே சிறந்த ஒரு தலைமைத்துவத்தை உருவாக்க அம்பாறை மாவட்ட மக்கள் தங்களது ஒவ்வொரு வாக்கையும் பொன்னான வாக்காக மதித்து முழு அளவில் தேசிய காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டுமென தேசிய காங்கிரஸ் திகாமடுல்ல வேட்பாளர் ஏ.எல்.எம். சலீம் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் தேசிய காங்கிரஸின் குதிரைச் சின்னத்தில் 3ஆம் இலக்கத்தில் போட்டியிடும் திகாமடுல்ல வேட்பாளரும், ஓய்வுபெற்ற சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியுமான ஏ.எல்.எம்.சலீம் வழங்கிய விசேட நேர்காணலின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எமது கேள்விக்கு அவர் தெரிவித்த பதில்கள் வருமாறு...

கேள்வி: உங்களைப் பற்றி கூறுங்கள்?

பதில்: நான் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். சாய்ந்தமருது அல் - ஜலால், மழ்ஹருஸ் ஸம்ஸ் வித்தியாலயங்களில் ஆரம்பக் கல்வியைக் கற்று, உயர் கல்வியை கல்முனை சாஹிராவில் கற்றேன்.

போட்டிப் பரீட்சையின் மூலம் ஆசிரியராகத் தெரிவு செய்யப்பட்டு, இலங்கை கல்வி நிர்வாக சேவை, இலங்கை நிர்வாக சேவை ஆகிய இரண்டிலும் தேர்ச்சி பெற்று பல்வேறு திணைக்களங்கள், பல அமைச்சுக்களில் தொழில் புரிந்தேன்.

குடியகல்வு - குடிவரவு திணைக்களத்தில் உதவிக்கட்டுப்பாட்டாளராக, இலங்கை அரச தகவல் திணைக்களத்தில் பிரதிப் பணிப்பாளராக, சாய்ந்தமருது, அக்கறைப்பற்று போன்ற பிரதேசங்களில் பிரதேச செயலாளராக, சட்டம் ஒழுங்கு தென் மாகாண அமைச்சு மற்றும் கைத்தொழில் ஏற்றுமதி முதலீட்டு, ஊக்குவிப்பு அமைச்சு ஆகியவற்றின் மேலதிகச் செயலாளராக குறிப்பிடத்தக்க அளவு சேவையாற்றியுள்ளேன். 

கேள்வி: இலங்கை நிர்வாக சேவையில் மூத்த உத்தியோகத்தராக இருந்த நீங்கள், அரசியலைத் தெரிவு செய்ததற்கான காரணம் என்ன?

பதில்: அரசியலைப் பொறுத்தவரையில் பல அரசியல் தலைவர்களுடன் இணைந்து நான் சேவையில் இருக்கும் காலப்பகுதியில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருக்கின்றேன். அதிலும் குறிப்பாக சாய்ந்தமருது, அக்கறைப்பற்று பிரதேசங்களிலே எனது பணிகளைச் செய்திருக்கிறேன். அந்த வகையில் அரசியல்வாதிகளோடும் பழகும் சந்தர்ப்பம், குறிப்பாக அமைச்சர்களோடும் மற்றும் ஏனைய மக்கள் பிரதிநிதிகளோடு கலந்த சந்தர்ப்பங்களில் நான் அறிந்த விடயம், சாய்ந்தமருது அக்கறைப்பற்று என்ற இரண்டு பிரதேசங்களையும் ஒப்பீட்டுப் பார்க்கின்றபோது அக்கறைப்பற்றில் இருந்த தலைமைத்துவம் அன்றைய அமைச்சர் அதாவுல்லாஹ்வுக்கும் கல்முனையில் இருந்த மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்பட்டன. அத்தகைய வேறுபாடுகளில் மிக முக்கியமாக, வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றுதல் மற்றும் மக்களிடம் பொய் வாக்குறுதிகளைக் கூறுதல், பொய்யான தகவல்களைக் கூறுதல் போன்ற விடயங்களின் மூலம் எங்களுடைய பிரதேசம் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருவதை அறிந்தேன்.

சாய்ந்தமருது பிரதேசம் ஒரு நகரசபையைப் பெறவேண்டுமென்ற கோஷத்தை முன்வைத்து பல ஆண்டு காலம் முன்னெடுப்புக்களை நடத்திக் கொண்டிருந்த வேளையில் பள்ளிவாசல் சமூகம் மற்றும் புத்திஜீவிகள் உள்ளடக்கிய குழு போன்றவர்களிடம் கல்முனைப் பிரதேசத்துக்கு பிரதிநிதியாக இருந்த அப்போதைய இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட முஸ்லிம் காங்கிஸின் மூத்த தலைவர்கள் இணைந்து நகரசபையைப் பெற்றுத் தருவதாக ஏறக்குறைய 60 க்கு மேற்பட்ட தடவைகள் கொழும்பிலும் மற்றும் ஏனைய இடங்களிலும் சந்தித்து வாக்குறுதிகள் வழங்கியதுடன், முன்னாள் பிரதமர் ரணிலை அழைத்து வந்து 2015ஆம் ஆண்டு ஒரு வாக்குறுதியை வழங்கினார். வழங்கப்பட்ட அந்த வாக்குறுதிகள் எல்லாம் மீறப்பட்ட நிலையில், பொதுமக்கள் பல கோஷங்களை முன்வைத்து, கடந்த காலங்களிலே நகரசபையைப் பெறுவதற்கான வழிமுறைகளைக் கையாண்டனர்.

அந்த வகையில்தான் அரசியல் அதிகாரம் என்பது இப்பிரதேசத்திற்குத் கட்டாயமாகத் தேவைப்பட்டது. அதிலும் குறிப்பாக சாய்ந்தமருது கிடைத்திருக்கின்ற நகரசபையை தடுக்கின்ற நடவடிக்கைகளை முன்னாள் அமைச்சர் ஹரீஸ் போன்றவர்களோடு உள்ளூர் அரசியல்வாதிகளும் கைகோர்த்து அரசியல் இலாபங்களுக்காக இப்பிரதேசத்தில் கிடைக்கவிருந்த உள்ளூராட்சியைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தனர்.

நகரசபை கிடைத்த நிலையில், எதிர்காலத்தில் இந்த நகரசபையின் முன்னெடுப்புக்கள் மட்டுமல்லாது இந்தப் பிரதேசத்தின் எதிர்கால நடவடிக்கைளைக் கருத்திற்கொண்டு, கல்முனைத் தொகுதியை அடிப்படையாக வைத்து பார்க்கின்றபோது கல்முனைத் தொகுதி கடந்த 20 வருடங்களாக அபிவிருத்தி குன்றிய நிலையில் காணப்படுகின்றது. கல்முனைப் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் பா.உ. ஹரீஸ், இந்த செயற்பாடுகளை முன்னெடுக்காத நிலை இன்றும் இங்கு காணப்படுகின்றது.

அபிவிருத்தியில் பின்தங்கிய நிலையில் காணப்படும் கல்முனைத் தொகுதியை எதிர்காலத்தில் அபிவிருத்தியைக்காண வேண்டும் என்ற நோக்கோடும் கல்முனைப் பிரதேசத்திற்கு ஓர் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் எமது பள்ளிவாசல் மற்றும் ஏனைய சமூகங்கள் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்தப் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி, எதிர்காலத்தில் அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில்தான் அரசியலில் நுழைய வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. இது காலத்தின் தேவையாகவும் இருக்கின்றது.

அதுபோன்று கல்முனைப் பிரதேசத்தில் தமிழ்-முஸ்லிம் உறவில் விரிசல்கள் காணப்படுகின்றன. அந்த உறவுப்பாலம் கட்டி எழுப்பப்பட வேண்டும். எதிர்காலத்தில் பிரதேச, இன ரீதியான வேறுபாடுகளுக்கு அப்பால் கல்முனைப் பிரதேசம் மட்டுமல்லாது முழு அம்பாறை மாவட்டமும் அபிவிருத்தி செய்யப்பட்டு, எல்லோரும் ஒன்றித்து வாழக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கிலும் நான் அரசியலுக்குள் நுழைந்தேன். 

கேள்வி: திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டி இடுவதற்கு நீங்கள் ஏன் தேசிய காங்கிரஸைத் தெரிவு செய்தீர்கள்?

பதில்: கடந்த 20 வருடங்களாக ஆட்சியின் பங்காளி கட்சியாக இருக்கின்ற முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இந்த நாட்டிலே முஸ்லிம்களுக்கான நன்மதிப்பை இழக்கச் செய்துள்ளன. அவர்களுடைய வாக்கு வங்கிகளையும் மற்றும் ஏனைய விடயங்களையும் அவர்களுடைய தனிப்பட்ட இலாபங்களைக் கருத்திற்கொண்டு செயற்பட்டதனால் இந்நாட்டு முஸ்லிம்களுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. அத்தோடு, இன சௌஜன்யம் அதாவது சிங்கள, தமிழ், முஸ்லிம் உறவுகளில் பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது.

இவ்வாறான நிலையில் இலங்கையில் எமது பிரதேசத்தில் மட்டுமல்லாது, கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்லாது அகில இலங்கை ரீதியில் இன சௌஜன்யத்தை ஏற்படுத்தும் ஒரு கட்சியாக தேசிய காங்கிரஸ் திகழ்கிறது.

அது மட்டுமல்லாது எமது பிரதேசத்தில் புரையோடிப் போயுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கூடிய, மறைந்த மாமனிதர் அஷ்ரபின் பாஷறையில் ஒன்றித்து செயற்பட்ட முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்வின் தலைமைத்துவத்தின் கீழ் உண்மை, நேர்மை, நியாயம், சத்தியம் போன்றவைகளை முன்வைத்து செயற்படுகின்ற கட்சியாகவும் தேசிய காங்கிரஸ் இருக்கின்றது.

மேலும் எமது சாய்ந்தமருதுக்கான நகரசபையை கல்முனைக்கு பாதிப்பு ஏற்படாது கல்முனை, சாய்ந்தமருது என்ற இரண்டு விடயங்களையும் ஒரே வகையில் அணுகி, கல்முனைப் பிரதேசத்திலே பிரதேச, இன ரீதியான வேறுபாடுகளுக்கு அப்பால் அந்தப் பிரதேசத்தின் உள்ளூராட்சி, அரசியல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும், அந்த மக்களையும் திருப்திப்படுத்தி, எதிர்காலத்தில் அவர்களுடைய தேவைகளைப் பூர்த்திசெய்து, அவர்களையும் பங்காளியாக மாற்ற வேண்டும் போன்ற விடயங்கள் காரணமாகத்தான் தேசிய காங்கிரஸில் இணைந்தேன்.

தேசிய காங்கிரஸ் கட்சியானது, அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தவரை 03 பாராளுமன்ற உறுப்பினர்களை பெறக்கூடிய கட்சியாக இருக்கின்றது. அம்பாறை மாவட்டத்தில் எழுச்சியை ஏற்படுத்தி முஸ்லிம் வாக்காளர்கள் பெரும்பான்மையாகவும் சிங்கள, தமிழ் வாக்காளர்களும் அக்கட்சியுடன் இணைந்து பூரணத்துவமிக்க ஒரு கட்சியாக அது இன்று வலம் வந்து கொண்டிருக்கின்றது.

குறிப்பாக மூவின மக்களும் தேசிய ரீதியில் விரும்பக்கூடிய கட்சியாகவும் அரசினுடைய பங்காளிக் கட்சியாகவும் தேசிய காங்கிரஸ் அமைந்திருப்பதனால் எதிரே வரப்போகின்ற அமைச்சரவையில் முஸ்லிம் தேசம் எதிர்பார்கின்ற அமைச்சராக அதாவுல்லாஹ் தலைமையில் தேசிய காங்கிரஸ் இருப்பதால் எதிர்காலத்தில் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கின்ற முக்கிய பிரச்சினைகளுக்கான தீர்வு தேசிய காங்கிரஸின் மூலமாகத்தான் பெறக்கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது. அந்த வகையில் அந்த கட்சியை ஆதரித்து, வலு சேர்த்து இந்த மாவட்டத்திலே புத்தி சாதூரியமானவர்களுக்கு பிரதிநிதித்துவத்தை வழங்குவதன் மூலம் எதிர்காலத்தில் விடிவுக்கான வழியாகத்தான் தேசிய காங்கிரஸ் கட்சியை தெரிவு செய்தோம்.

கேள்வி: உங்களுடைய கட்சி அரச சார்பு கட்சியாக இருக்கின்றதனால் எதிர்காலத்தில் அரசாங்கத்தின் வேலைகளைச் செய்யக் கூடிய வாய்ப்பு உங்களுக்கு இருக்கின்றதா?

பதில்: மலையகத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸும், வடக்கில் ஈ.பி.டி.பி. எவ்வாறு அரசின் பங்காளிக் கட்சியாக இருக்கின்றதோ அதேபோன்றுதான் அரசின் முக்கிய பங்காளிக் கட்சியாக இலங்கை பொதுஜன பெரமுன கட்சியில் அங்கம் வகிக்கின்ற கட்சியாக தேசிய காங்கிரஸ் கட்சி இருக்கின்றது.

எங்களைப் பொறுத்தமட்டில் பாராளுமன்றத் தேர்தல்களிலே வியூகம் வகுத்து செயற்படுகின்றபோது தனியாகவும், கூட்டாகவும் இணைந்து கேட்க முடியும். அந்த வகையில் இன்று அம்பாறை மாவட்டத்திலே தனித்து போட்டியிட்டோம், எமது கள நிலவரம் மிகச் சிறந்த முறையிலே இருக்கின்றது.

அரசின் சகல வேலைத்திட்டங்களிலும் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் இணைப்புக்குழுத் தலைமைகள், ஏனைய விடயங்கள், கரையோரப் பிராந்தியத்தின் அபிவிருத்தி மட்டுமல்லாது, கிழக்கு மாகாணப் பிரச்சினைகள், தேசிய ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய வகையில் எமது பிரதேசத்தின் எல்லா வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்கின்ற பங்காளிக் கட்சியாக தேசிய காங்கிரஸ் கட்சி இருப்பதால் அரசின் அனைத்து வேலைகளிலும் பங்கு கொள்ளும். 

கேள்வி: சாய்ந்தமருது நகரசபை பெறுவது தொடர்பாக உங்களுடைய முயற்சிகள் எப்படி அமையும்?

பதில்: சாய்ந்தமருது நகரசபை ஏற்கனவே வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டும், இன்று நகரசபைக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கின்றது. அதிலும் குறிப்பாக நகரசபை என்பது 2022மே மாதம் 20ஆம் திகதிக்கு பிற்பட்ட காலத்தில்தான் ஏற்படுத்தப்படவிருக்கின்றது.

அமையவிருக்கின்ற சபைக்கான வர்த்தமானி அறிவித்தல் ஏற்கனவே சம்பந்தப்பட்ட அமைச்சின் அமைச்சரால் வெளியிடப்பட்டு இருக்கின்றது. அந்த வகையில் எதிர்காலத்திலே நகரசபை சம்பந்தமான முன்னெடுப்புக்கள் மற்றும் அதனுடைய அமைவு, செயற்பாடுகள் சம்பந்தமாகவும் சிந்தித்து அதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது.

அதுபோன்றுதான் கல்முனை பிரதேசத்தின் ஏனைய மூன்று பிரதேசங்கள், மூன்று உள்ளூராட்சி சபைகளாகப் பிரிக்கப்பட்டு, அதிலே கல்முனை மாநகரசபை, மருதமுனை அடிப்படிடையாகக் கொண்ட நகரசபை, அதேபோன்று தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு நகரசபை என்ற மூன்று சபைகளும் எதிர்காலத்திலே உருவாக்கப்பட இருக்கின்றன.

அந்த வகையில் எதிர்காலத்திலே இந்த முன்னெடுப்புக்களை மேற்கொள்ள இருக்கின்றோம்.

எனவே சாய்ந்தமருது நகரசபை என்பது ஏற்கனவே அது சம்பந்தப்பட்ட வர்த்தமானி வெளியிடப்பட்ட நிலையில் இருக்கின்றது. எதிர்காலத்தில் அதனை உறுதிப்படுத்தி, அந்த சபைக்கான ஏனைய நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கின்றோம்.

கேள்வி: விகிதாரசாரத் தேர்தல் முறையின் கீழ் உங்களுடைய கட்சி வெற்றி பெற்று, போதியளவு பிரதிநிதித்துவம் கிடைக்காவிட்டால் நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்?

பதில்: அந்தக் கேள்விக்கு ஒது துளி கூட இடமில்லை. ஏனென்றால், இன்றுள்ள நிலமையில் அம்பாறை மாவட்டத்தில் 3 பிரதிநித்துவங்களைப் பெறுகின்ற கட்சிகளில் முதன்மையான கட்சியாக தேசிய காங்கிரஸ் கட்சி ஓர் உச்ச நிலையை அடைந்திருக்கின்றது. பொதுஜன பெரமுன மற்றும் தேசிய காங்கிரஸ் என்ற இந்த இரண்டு கட்சிகளுக்கிடையில் 03 பா.பிரதிநிதிகளைப் பெறுவதற்கான போட்டி நிலவுகின்றது. ஏனைய கட்சிகள் கடந்த கால செயற்பாடுகள் காரணமாக மக்கள் மத்தியில் மிகவும் விரும்பத் தகாத கட்சிகளாக மாறியுள்ளன. ஆனால் தேசிய காங்கிரஸில் மக்கள் நாளுக்கு நாள் இணைந்து தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

எதிர்காலத்திலே பிரதிநிதித்துவத்தை பெறுகின்ற கட்சியாகத்தான் தேசிய காங்கிரஸ் இருக்கின்றதே யொழிய, அது தோல்வி அடைவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை. எனவே 03 பா. பிரதிநிதித்துவத்தைப் பெறக்கூடிய கட்சியாக மக்கள் மத்தியிலே பேசப்படுகின்ற வேளையில், அவ்வாறன ஒரு நிலை ஏற்படாது என்பதை திடமாகக் கூறுகின்றேன்.

கேள்வி: நீங்கள் இந்தத் தேர்தலிலே முன்வைத்திருக்கின்ற பிரதான கோஷம் என்ன?

பதில்: நாட்டு மக்கள் அனைவரும் இலங்கையர் என்ற ஒருமித்த குரலோடு, நாட்டுப்பற்றுள்ளவர்களாக, ஏனைய சமூகங்களோடு ஒன்றித்து, இன சௌஜன்யத்தோடு செயற்பட வேண்டும் என்ற கோஷத்தை முன்வைத்தும், அம்பாறை மாவட்டத்தில் எதிர்பார்த்து செய்யப்படாத அபிவிருத்தித்திட்டங்களை எதிர்காலத்தில் செய்வதற்கான கோஷங்களையும் முன்வைத்தும் வருகின்றோம். அது மட்டுமல்லாது ஏனைய பிரதேசங்களிருந்து ஒரு தலைமைத்துவத்தை வழங்குவதை விட, இப் பிரதேசத்திலிருந்து சிறந்த ஒரு தலைமைத்துவத்தை எதிர்காலத்தில் தேசிய ரீதியில் முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும் என்ற அடிப்படையிலும் எங்களுடைய முன்னெடுப்புக்கள் நடைபெற்று வருகின்றன.

கேள்வி: நீங்கள் இலங்கை நிர்வாக சேவையில் உயர்ந்த இடத்துக்கு வந்துவிட்டு, இப்போது அரசியலுக்கு வந்திருக்கின்றீர்கள். உங்களிடம் இப் பிரதேசத்திற்கான விசேட திட்டங்கள் ஏதும் இருக்கின்றதா?

பதில்: ஆம்! இப்பிரதேசத்தில் தீர்க்கப்படாது புரையோடிப் போயுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு விஷேட அணுகுமுறைகள் மூலம் தீர்வுகளைக் காணவேண்டியுள்ளதால், பல விஷேட அணுகுமுறைகளை அறிமுகப்படுத்த இருக்கின்றோம். குறிப்பாக நகர அபிவிருத்தி, கல்முனை சம்பந்தமான பிரச்சினை அதேபோன்று பொத்துவில் முதல் கல்முனை, சம்மாந்துறை போன்ற பிரதேசங்களில் உள்ள பிரச்சினைகளுக்கு சிறந்த அணுகுமுறை மூலமான தீர்வுகளை எதிர்காலத்திலே எட்ட இருக்கின்றோம்.

இளைஞர்களுடைய வேலைவாய்ப்பு முதல் கல்வி தொடர்பான மக்கள் எதிர்நோக்கின்ற எந்த வகையான பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை பெற்றுக் கொடுக்க இருக்கின்றோம்.

கேள்வி: எதிர்காலத்தில் உங்கள் கட்சியும் மொட்டுக் கட்சியும் ஒன்று சேர்ந்து செயற்படுமா?

பதில்: ஆம்! மொட்டுக் கட்சியில் எமது கட்சி பங்காளிக் கட்சியாக செயற்படுவதனால், தனித்துக் கேட்டாலும் அது ஆளும் கட்சியுடன் இணைந்து செயற்படும்.

கேள்வி: இறுதியாக, திகாமடுல்ல மாவட்ட மக்களுக்கு நீங்கள் கூறும் செய்தி என்ன?

பதில்: திகாமடுல்ல மாவட்ட மக்கள் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய வகையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இந்த மாவட்டம் மூவின மக்களும் செறிந்து வாழுகின்ற மாவட்டமாக இருப்பதால், மூவின மக்களும் விரும்பும் கட்சியாக தேசிய காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்திலே போட்டி இடுவதால் அதன் தலைமையான ஏ.எல்.எம். அதாவுல்லாவை மூவின மக்களும் ஏற்றுக் கொள்வதாலும் அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றித்து வாக்களித்து, வெற்றி பெறுவதற்காக தங்களால் முடியுமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

அம்பாறை மாவட்ட ஒவ்வொரு வாக்காளரும் தங்களது உரிமையான வாக்கை தேசிய காங்கிரஸின் சின்னமான குதிரைக்கும் அதன் இலக்கமான 1 க்கும் அளிப்பதன் மூலம் சிறந்த தலைமைத்துவத்தை எமது பகுதியிலே உருவாக்க முடியும்.

அத்தோடு, தேசிய காங்கிரஸின் பட்டியலில் உள்ள எனது இலக்கமான 3 க்கும் மற்றும் ஏனைய ஒரு வேட்பாளருக்கும் வாக்களிப்பதன் மூலம் இந்தப் பிரதேசத்தில் 03 பிரதிநிதிகளைப் பெறுவதற்கான முயற்சிகளில் பங்காளிகளாக நீங்கள் மாற முடியும் என்றும் அனைவரையும் வேண்டிக் கொள்கின்றேன்.

Msm Zahir

No comments:

Post a Comment