மஹிந்த தேசப்பிரியவின் அறிவிப்பு குறித்து பெருமிதமடையும் சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 4, 2020

மஹிந்த தேசப்பிரியவின் அறிவிப்பு குறித்து பெருமிதமடையும் சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு

தேர்தல் முடிவுகள் 6 ஆம் திகதி ...
(நா.தனுஜா)

வாக்களிப்பு நிலையங்கள்தான் பொதுமக்களுக்குரிய மிகவும் பாதுகாப்பான இடம் என்றும், எனவே வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகைதர அஞ்சத் தேவையில்லை என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளமையானது பாதுகாப்புக் கட்டமைப்புக்களின் உயர் நம்பகத்தன்மையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்று சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு சுட்டிக்காட்டியிருக்கிறது.

கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலின் பின்னர் தெற்காசியாவில் மிகப்பெரியளவில் நடைபெறும் முதலாவது தேர்தல், இலங்கையில் நாளை நடைபெறும் ஒன்பதாவது பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தலாகும்.

இம்முறை தேர்தலில் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றிருக்கும் வாக்காளர்கள் முகக் கவசங்களை அணிவதுடன், கைகளையும் நன்கு கழுவி, சமூக இடைவெளியைப் பேணியவாறு உரிய சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக வாக்களிக்க வேண்டும் என்று சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு கேட்டுக்கொண்டிருக்கிறது.

நாடளாவிய ரீதியில் தயார் செய்யப்பட்டிருக்கும் 12,985 வாக்களிப்பு நிலையங்களிலும் மிகவும் பாதுகாப்பான முறையில் பொதுத் தேர்தலை நடத்தி முடிப்பதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மிகவும் உயர்ந்த நுணுக்கங்களுடன் கூடிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

வாக்களிப்பு நிலையங்கள்தான் பொதுமக்களுக்குரிய மிகவும் பாதுகாப்பான இடம் என்றும், எனவே வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகைதர அஞ்சத் தேவையில்லை என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளமையானது பாதுகாப்புக் கட்டமைப்புக்களின் உயர் நம்பகத்தன்மையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்றும் அந்த வலையமைப்பு சுட்டிக்காட்டியிருக்கிறது.

அதேவேளை நாட்டின் அனைத்து மக்களும் பாதுகாப்பானதும் அமைதியானதுமான முறையில் வாக்களிப்பதற்குத் தகுந்த சூழலை உருவாக்குவதில் சுகாதாரப் பிரிவு அதிகாரிகள், பாதுகாப்புத்துறை அதிகாரிகள், ஊடகங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் என்பவற்றினால் வழங்கப்பட்ட பங்களிப்பிற்கும் சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு வரவேற்புத் தெரிவித்திருக்கிறது.

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக விதிக்கப்பட்ட பயணக்கட்டுப்பாடுகள் மற்றும் சுகாதார நடைமுறைகளின் காரணமாக, கடந்த 10 வருட காலத்தில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் எவருமின்றி இலங்கையில் நடைபெறும் முதலாவது தேசிய ரீதியான தேர்தல் இதுவாகும்.

அவ்வாறிருப்பினும் கூட சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு புதுமையான வழிமுறையொன்றின் ஊடாக இம்முறை இலங்கையில் நடைபெறும் பொதுத் தேர்தல்களை மதிப்பீடு செய்யும் பணிகளில் ஈடுபடுகின்றது. அது தமது உறுப்பினர்கள் அடங்கிய 6 மதிப்பீட்டுக் குழுக்களை குருணாகலை, பொலனறுவை, யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் வாக்களிப்பு மற்றும் வாக்கெண்ணல் பணிகளைக் கண்காணிப்பதற்கென நியமித்திருக்கிறது.

அத்தோடு தேர்தலுடன் தொடர்புபட்ட பல்வேறு தரப்பினருடனும் நவீன தொலைத்தொடர்பாடல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த வலையமைப்பு நேர்காணல்களையும் நடத்தும். ஒரு தொற்று நோய்ப் பரவலுக்கு மத்தியில் பொதுத் தேர்லை நடத்துகின்ற அனுபவம் உள்ளடங்கலாக, இந்தத் தேர்தல் மதிப்பீடு தொடர்பான இறுதி அறிக்கை சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பினால் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment